கடற்கரையில் நின்று விளக்கேற்றும் புனிதவணக்க நிகழ்வு. Southend-on-Sea Shoebury East Beach கடற்கரையில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Meiveli Media Team

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, Southend-on-Sea பகுதியில் உள்ள Shoebury East Beach கடற்கரையில் விளக்கேற்றும் புனிதவணக்க நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே 18 அன்று தமிழீழ மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பில் உயிரிழந்த மக்களை நினைவுகூரவும், நீதிக்கான குரலை உலகிற்கு எடுத்துரைக்கவும் இந்த நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
Greenwich நேரப்படி மே 17 மாலை 8.45 மணிக்கு விளக்கேற்றப்படும் இந்த நிகழ்வு, தமிழீழத்தில் அதிகாலை மே 18 ஆகும் நேரத்துடன் இணைந்ததாக அமைந்துள்ளது. மேலும், கடலோரத்தில் விளக்கேற்றுவது தமிழர் மரபையும், தாயக நினைவையும் குறிக்கும் ஒரு உணர்வுபூர்வ அடையாளமாகும்.Shoebury East Beach பகுதி, முள்ளிவாய்க்காலை ஒத்த புவியியல் அமைப்பைக் கொண்டதாலும், தேம்ஸ் நதி கடலுடன் சங்கமிக்கும் இடமாக இருப்பதாலும் இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நினைவு நிகழ்வை Southend-on-Sea மற்றும் பிரித்தானியாவின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இணைந்து ஒழுங்குபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இளம் தலைமுறைக்கு தமிழர் வரலாறு, தாயக உணர்வு மற்றும் நீதிக்கான போராட்டத்தின் அவசியத்தை எடுத்துரைப்பதை முக்கிய நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்