அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் ஹண்டா வைரஸ் (Hantavirus) முதல் பாதிப்புகள் பதிவு.
Meiveli Media Team

அட்லாண்டிக் கடலில் பயணித்த ‘எம்.வி. ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசு சுற்றுலா கப்பலில் ஏற்பட்ட ஹண்டா வைரஸ் (Hantavirus) பாதிப்பு தற்போது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு நெப்ராஸ்கா மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்ட 17 அமெரிக்கர்களில் ஒருவருக்குத் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதோடு பிரான்ஸ் பாரிஸ் நகருக்கு அழைத்து வரப்பட்ட 5 பயணிகளில் ஒரு பிரெஞ்சு பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானப் பயணத்தின் போதே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இந்தக் கப்பலில் பயணித்தவர்களில் இதுவரை ஒரு நெதர்லாந்து தம்பதி மற்றும் ஒரு ஜெர்மனி பெண் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.வழக்கமாக ஹண்டா வைரஸ் எலிகளின் கழிவுகள் மூலம் பரவும். ஆனால், தற்போது பரவியுள்ள ‘ஆண்டிஸ் வைரஸ்’ (Andes virus) என்ற உருமாறிய வகை, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது என்பதால் உலக சுகாதார மையம் இதனை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
சுமார் 23 நாடுகளைச் சேர்ந்த 150 பயணிகள் இந்தக் கப்பலில் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஸ்பெயினின் டெனெரிஃப் (Tenerife) தீவு வழியாக அந்தந்த நாடுகளுக்கு ராணுவ மற்றும் சிறப்பு விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.பயணிகள் அனைவரும் கடுமையான தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இது கோவிட்-19 போன்ற பெருந்தொற்றாக மாற வாய்ப்பில்லை என்றும், பொதுமக்களுக்கான ஆபத்து மிகக் குறைவு என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

