இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கக் கோரி யாழ். கடற்றொழில் திணைக்களத்தில் வசந்த முதலிகே முறையீடு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதைக் கண்டித்தும், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரியும் மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து முன்னெடுக்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதுடன், இலங்கையின் கடல் வளங்கள் பாரியளவில் அழிக்கப்படுவது தொடர்பிலும் வசந்த முதலிகே தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டார்.
குறிப்பாக, அண்மையில் பலாலிப் பகுதியில் இலங்கை மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வசந்த முதலிகே, இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி முறைகளால் எமது நாட்டின் கடல் வளம் அழிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எமது நாட்டு மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த விடயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

