ஆன்மீகப் பாதையில் செயற்கை நுண்ணறிவு: தென்கொரியாவின் முதல் ‘ரோபோ துறவி’ புரட்சி
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தென்கொரியாவின் பௌத்த மத வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, அந்த நாட்டின் முதலாவது ரோபோ துறவி அதிகாரப்பூர்வமாக பௌத்த மதச் சடங்குகளில் இணைத்துக்கொள்ளப்பட்டது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புத்தர் பிறந்தநாளான வெசாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, சியோலில் உள்ள புகழ்பெற்ற ஜொக்யேசா ஆலயத்தின் தயுங்ஜியோன் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை காலை 10 மணியளவில் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது. சுமார் 130 சென்டிமீட்டர் உயரமும், மனித உருவ அமைப்பும் கொண்ட இந்த ரோபோ, சீன குடிமுறை ரோபோவியல் நிறுவனமான யூனிட்ரீ மூலம் வடிவமைக்கப்பட்ட ஜி1 ரகத்தைச் சேர்ந்ததாகும்.

பாரம்பரிய பெளத்த துறவிகளின் புனித ஆடையான காசாயவை அணிந்திருந்த இந்த ரோபோவுக்கு, ஜொக்யே பௌத்த பீடத்தினால் ‘சுகே’ எனும் தீட்சை வழங்கப்பட்டு ‘காபி’ என்ற பௌத்த தர்ம நாமம் சூட்டப்பட்டது. சித்தார்த்தரின் பெயரிலிருந்தும், கொரிய மொழியில் கருணை எனப் பொருள்படும் சொல்லிலிருந்தும் இந்த பெயர் உருவாக்கப்பட்டதாக ஆலயப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இன்றைய நவீன காலத்தில் இளைய தலைமுறையினரை பௌத்த மதத்தின் பால் ஈர்ப்பதற்கும், ஆலயங்களில் நிலவும் துறவிகளின் தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வாகவும் இவ்வாறான தொழில்நுட்ப முயற்சிகளை முன்னெடுப்பதாக இந்த சடங்கை ஏற்பாடு செய்திருந்த ஜொக்யே பீடத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
புத்த பெருமான், அவரது போதனைகள் மற்றும் பெளத்த சங்கத்துக்கு தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த ரோபோ இந்த சடங்கில் பங்கேற்றதுடன், மனித உருவ ரோபோ ஒன்று இவ்வாறான சடங்கில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். சாதாரண துறவிகளுக்கு வழங்கப்படும் சடங்கு முறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த ரோபோவுக்கு வழங்கப்பட்டன.

குறிப்பாக, யோன்பி எனப்படும் கைகளில் ஊதுபத்தியால் சூடிட்டு தூய்மைப்படுத்தும் சடங்குக்கு பதிலாக, இந்த ரோபோவின் கையில் தாமரை விளக்கு திருவிழா அடையாள ஒட்டி ஒட்டப்பட்டதுடன், அதன் கழுத்தில் நூற்றெட்டு மணிகள் கொண்ட பிரார்த்தனை மாலையும் அணிவிக்கப்பட்டது.
மேலும், பௌத்த மதத்தின் ஐந்து கட்டளைகள் இந்த ரோபோவுக்காகச் சிறப்பாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டு போதிக்கப்பட்டன. அதன்படி, உயிர்களைப் பாதுகாத்தல், ஏனைய ரோபோக்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்காதிருத்தல், மனிதர்களுக்கு மதிப்பளித்து கீழ்ப்படிதல், ஏமாற்று நடத்தைகளைத் தவிர்த்தல் மற்றும் அளவுக்கு அதிகமாக மின்னேற்றம் செய்யாமல் மின்னாற்றலைச் சேமித்தல் ஆகிய ஐந்து விதிகளும் இதன் அடிப்படைத் தர்மங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்மீகமும் நவீன தொழில்நுட்பமும் கைகோர்த்த இந்த நிகழ்வு, எதிர்கால மதச் சடங்குகளில் ஒரு புதிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.

