சான்யா 2026 பதக்கம் வென்றவர்களைக் கௌரவிக்கும் விழா
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சீனாவின் சான்யாவில் நடைபெற்ற 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் 7 பதக்கங்களை வென்று, 45 ஆசிய நாடுகளில் இலங்கையை பதக்கப் பட்டியலில் 10வது இடத்திற்கு உயர்த்திய வீரர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்றைய தினம் மாலை (04) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில் நடைபெற்றது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் திரு. சுதத் திலகரத்ன மற்றும் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் (NOCSL) புதிய தலைவர் திரு. அசங்க செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இப்போட்டித் தொடரில் இலங்கை ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தது:
தங்கப் பதக்கம்: நிபுணி வாசனா – கடற்கரை மல்யுத்தம் (பெண்கள் 50 கிலோ)
வெள்ளிப் பதக்கம்: இஷாரா சமன்மாலி – கடற்கரை மெய்வல்லுநர் (பெண்கள் நீளம் பாய்தல்)
வெள்ளிப் பதக்கம்: பெண்கள் கபடி அணி
வெண்கலப் பதக்கம்: ஜயத்ர சம்பத் – கடற்கரை மெய்வல்லுநர் (ஆண்கள் நீளம் பாய்தல்)
வெண்கலப் பதக்கம்: சஷிகலா லங்காத்திலக்க – கடற்கரை மெய்வல்லுநர் (பெண்கள் நீளம் பாய்தல்)
வெண்கலப் பதக்கம்: ஆண்கள் அஞ்சலோட்டக் குழு (4×60 மீ அஞ்சலோட்டம்)
வெண்கலப் பதக்கம்: ஆண்கள் கபடி அணி

“Mission Olympic” மற்றும் விளையாட்டின் புதிய பயணம்
அமைச்சர் சுனில் குமார கமகே உரையாற்றுகையில், நிபுணி வாசனா உள்ளிட்ட குழுவினர் பெற்ற இந்த வெற்றி, அமைச்சினால் முன்னெடுக்கப்படும் “Mission Olympic” திட்டத்தின் ஒரு விசேட மைல்கல்லாகும் எனத் தெரிவித்தார். வீரர்களுக்கு தொழில்முறை ரீதியிலான பயிற்சிகளையும் வசதிகளையும் வழங்குவதன் மூலம், எதிர்கால ஒலிம்பிக் கனவை நோக்கி அவர்களை வழிநடத்த அமைச்சு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதி அமைச்சர் சுதத் திலகரத்ன வலியுறுத்தினார்.


