நீலகாமம் தோட்ட அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் திரண்ட மலையக மக்கள்: காணி உரிமை கோரி பாரிய கண்டனப் போராட்டம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேற்றப்பட்ட மனிதாபிமானமற்ற அடக்குமுறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களின் அடிப்படை உரிமையான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் இன்று முற்பகல் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

‘நாம் மலையகம்’ எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டத்தில், மலையக சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், வர்த்தக மற்றும் ஊடக அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள் எனப் பல தரப்பினரும் ஒன்றிணைந்து தமது பலமான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அண்மையில் நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளர் குடியிருப்பொன்றை தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பிரத்தியேக பாதுகாப்புப் படையினர் மனிதாபிமானமற்ற முறையில் அடித்து நொறுக்கிய சம்பவம் ஒட்டுமொத்த மலையகச் சமூகத்தினிடையேயும் பெரும் அதிர்வலைகளையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. கறுப்பு ஆடை அணிந்து, முகத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்து தோட்டத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், வன்முறையைப் பிரயோகித்து வீட்டைச் சேதப்படுத்தியமை சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கு காவல்துறையும், தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றக் கட்டமைப்பும் நடைமுறையில் உள்ள சூழலில், தோட்ட நிர்வாகங்கள் தமக்கென பிரத்தியேக கூலிப்படைகளை வைத்துக்கொண்டு சட்டத்தைக் கையில் எடுப்பது ஜனநாயக விரோதச் செயல் எனப் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறான அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நீலகாமம் தோட்ட மக்களுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை உறுதிப்படுத்துவதற்கு காணி உரிமை என்பது மிக முக்கிய காரணியாகும் என்பதைச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படும் கூலிப்படை கலாச்சாரம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என முழக்கமிட்டனர்.

நீலகாமம் வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பல்வேறு மட்டத்திலான கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே கொழும்பில் இந்த அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.