தமிழக அரசியலில் விஜய்யின் வெற்றி மற்றும் கச்சத்தீவு விவகாரம்: நாமல் ராஜபக்சவின் விசேட கருத்துக்கள்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இந்தியாவின் தமிழக அரசியலில் புதிய கட்சியைத் தொடங்கிப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் இந்த வெற்றிக்கு இளைஞர்களின் பலமான ஆதரவும், அவர் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையுமே முக்கிய காரணம் எனச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, விஜய்யின் அரசியல் பயணம் சிறக்கப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டார்.

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரும்போது அதன் யதார்த்தமான சவால்களை எதிர்கொள்வது அவசியம் எனத் தெரிவித்த அவர், குறிப்பாகத் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கும் அவரது குழுவினருக்கும் உள்ளது எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை, இந்திய அரசியலில் மீண்டும் பேசுபொருளாகியுள்ள கச்சத்தீவு விவகாரம் குறித்துக் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, கச்சத்தீவு என்பது இலங்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக, இந்தியாவிலிருந்து விசா பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வருமாறு நடிகர் விஜய்க்கு அவர் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் தாம் எப்போதும் உறுதியாக இருப்பதாகவும், அரசியல் மேடைகளில் எத்தகைய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் இலங்கையின் எல்லைகளுக்குள் எவ்வித விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஏனைய கட்சிகளிலிருந்து நபர்களை இணைத்துக் கொள்வது குறித்து விமர்சித்த அவர், இது அரசாங்கத்திடம் திறமையானவர்கள் இல்லை என்பதைக் காட்டுவதாகவும், இத்தகைய “டீல்” கலாசாரங்கள் அரசியலில் நீண்டகாலம் நிலைக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.