ராஜ்யசபாவில் பா.ஜ., – எம்.பி., க்களின் பலம் 113 ஆக அதிகரிப்பு

Meiveli Media Team


ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஏழு எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியமானதை அடுத்து, ராஜ்யசபாவில் அக்கட்சியின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை, சபை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்து, இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், முக்கியமான அரசியல் சாசன சட்டத்தை திருத்துவதற்கு தேவையான மூன்றில் இரு பங்கு பலத்தை தே.ஜ., கூட்டணி நெருங்கவுள்ளது. ஆம் ஆத்மியின் தேசிய முகமாக அறியப்பட்டவர், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., யாக இருந்த ராகவ் சத்தா. இவருக்கும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே சமீப காலமாக உரசல் இருந்தது. விமான நிலையத்தில் மலிவு விலை உணவு கடைகள் அமைத்ததற்காக, பா.ஜ., அரசை சமீபத்தில் ராகவ் சத்தா பாராட்டினார். இதையடுத்து, ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா துணை தலைவர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

அவருக்கு பதில், ஆம் ஆத்மியின் மற்றொரு எம்.பி.,யான அசோக் மிட்டல், கட்சியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். கடும் அதிருப்தியடைந்த ராகவ், கடந்த வாரம் ஆம் ஆத்மியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அத்துடன் மொத்தம் உள்ள 10 ஆம் ஆத்மி எம்.பி., க்களில் தன்னுடன் சேர்த்து ஏழு பேர் பா.ஜ., வில் இணைய தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால், டில்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.