தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்தல்: பிக்குவை மே 2 வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் தொகுதியைக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொறுப்பேற்கத் தயாராக இருந்த கடவத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்யாலங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த எனும் பிக்குவை, எதிர்வரும் மே மாதம் 2-ஆம் திகதி வரை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.

தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களுடன் வந்த இளம் பிக்குகள் விமான நிலையத்தில் வைத்துப் பிடிபட்ட வேளையில், அவற்றை பெற்றுக்கொள்வதற்காக அமிதானந்த பிக்கு அங்கு காத்திருந்துள்ளார். ஏனைய பிக்குகள் கைது செய்யப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், விமான நிலையத்திலிருந்து தப்பிச் சென்று மிரிஸ்வத்தை பகுதியில் மறைந்திருந்த நிலையில், பல பொலிஸ் குழுக்கள் இணைந்து நடத்திய விசேட தேடுதல் வேட்டையின் மூலம் கைது செய்யப்பட்டார் என கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேக நபரான பிக்குவின் மருத்துவ அறிக்கையின்படி அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இளம் பிக்குகளை தாய்லாந்து சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவை இவரே வழிநடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, 54-வது பிரிவின் கீழ் இவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

