தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்த 22 தேரர்கள் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தாய்லாந்து நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 பௌத்த தேரர்கள், இன்று மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக கொழும்பிலுள்ள சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நேற்றைய தினம் தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களது பயணப்பொதிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவற்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து குறித்த தேரர்கள் அனைவரும் பொலிஸாரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக, அவர்களின் உடல்நிலை குறித்த அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காகவும் போதைப்பொருள் தொடர்பான மேலதிக உறுதிப்படுத்தல்களுக்காகவும் அவர்கள் சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைகளைத் தொடர்ந்து இவர்கள் ஏனைய நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இதன் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்தும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

