கலைச்சேவையை பாராட்டி மூத்த கலைஞர் மல்லிகாவிற்கு தயாரிப்பாளர் செல்வின்தாஸினால் பொற்கிழி வழங்கி கௌரவிப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் கலைப்பண்பாட்டுத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகையும், பிரபல நடன ஆசிரியையுமான மல்லிகா கீர்த்தி அவர்களுக்கு, அவரது நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி நடிகரும் தயாரிப்பாளருமான செல்வின்தாஸ் அவர்களினால் இன்று 50,000 ரூபாய் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது தயாரிப்பாளரும் நடிகருமான செல்வின் தாஸ் தயாரித்து பிரதான பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான “க்ரே” திரைப்படத்தில் உலகப்புகழ் பெற்ற பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் வருகையை வெளியிடும் அறிமுக நிகழ்வின் ஓர் அங்கமாக நடைபெற்றது.
ஏற்கனவே இலங்கை அரசினால் வழங்கப்படும் உயரிய “கலாபூஷண” விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மல்லிகா கீர்த்தி அவர்களுக்கு, இன்றைய தினம் இந்த விசேட பொற்கிழி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட நடிகை ஷாந்தனா அவர்கள் இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

தனது 6 வயதிலேயே நடனத்துறையில் காலடி எடுத்து வைத்த மல்லிகா கீர்த்தி அவர்கள், முதலாவதாக கொழும்பு கமலா மோடி மண்டபத்தில் தனது நடனத்தை அரங்கேற்றினார். அதனைத் தொடர்ந்து, தனது 10 வயதில் இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்படமான “சமுதாயம்” எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரைத்துறையிலும் தடம் பதித்தார்.
புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர், பிற்காலத்தில் அதே பாடசாலையில் நடன ஆசிரியையாகப் பணியாற்றி பல மாணவர்களை கலைத்துறையில் உருவாக்கியுள்ளார்.
திரைப்படத்துறையைப் பொறுத்தவரை “The Blending” என்ற இலங்கையில் எடுக்கப்பட்ட முதலாவது ஆங்கிலத் திரைப்படம், “மாதா” என்ற சிங்களத் திரைப்படம் மற்றும் நவயுக தயாரிப்பான “பொம்மை” போன்ற படைப்புகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைய கௌரவிப்பு நிகழ்வின் போது நெகிழ்ச்சியுடன் உரையாற்றிய மல்லிகா கீர்த்தி அவர்கள், தனக்கு இந்த பொற்கிழியினை வழங்கிய செல்வின்தாஸ் சகோதரருக்கும், இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த ஷாந்தனா மற்றும் தனது மாணவி ஈஸ்வரி ஆகியோருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் மூத்த கலைஞருமான கவிஞர் இளநெஞ்சன் முர்சிதீன், மூத்த நாடக நடிகையும் நடனக் கலைஞருமான எம்.எல். ஈஸ்வரி, மூத்த இசைக்கலைஞரும் பாடகருமான முபாரக் இலியாஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அவர்களுடன் இசைத்துறையில் பன்முகத்திறமை கொண்ட சிறந்த இசையமைப்பாளரும், மூத்த பாடகரும், குரல் பயிற்றுவிப்பாளருமான கே. மஹிந்தகுமார், சிங்கள தமிழ் நடிகரும் மூத்த கலைஞருமான பி.டி. செல்வம், பிரபல சிரேஷ்ட படத்தொகுப்பாளர் நிரஞ்சன், மற்றும் வளர்ந்து வரும் இளம் நடிகையான ரஷிகா அருள்செல்வம் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
குறிப்பாக, நலிவுற்ற நிலையில் இருக்கும் மூத்த கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கை கொடுத்துதவும் தயாரிப்பாளரும் நடிகருமான செல்வின்தாஸ் அவர்களின் மனிதாபிமானமிக்க செயலுக்கு, கலைத்துறையினர் சார்பில் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


