தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : அதிகபட்ச வாக்குகள் கரூரில் பதிவு
Meiveli Media Team

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. 4, 023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள். தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 33,211 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5, 949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
இங்கு நுண்பார்வையாளர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸார் அல்லது துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 83,875 காவல் துறை பணியாளர்கள், 40,427 காவல் துறை அல்லாத முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 89.32வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44வீதம வாக்குகள் பதிவாகியுள்ளன.

