இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பாரதியாரின் சொந்த ஊரான எட்டயபுரத்தில் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்
Meiveli Media Team

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட எட்டயபுரம் அருகே குளத்துள்வாய்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி 4 கிராம மக்கள், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தலை புறக்கணித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 45 வீடுகள் அமைந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதன் பின்னர் குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை உருவாகியது. அவர்களுக்கும் முகாமில் உள்ளவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களை கண்காணிக்க வேண்டும். இப்பகுதியில் போதை பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், குளத்துள்வாய்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கியிருந்த கோழிப்பண்ணை ஷெட்டை தங்களுக்கு விவசாய விளை பொருட்கள் காய வைக்கும் களமாக பயன்படுத்த வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்தவொரு தீர்வும் எட்டப்படாமல் அப்படியே உள்ளது. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ம் தேதி குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக் கொடிகளை ஏற்றி, சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர். தமிழர் முகாமை இடமாற்றம் செய்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிப்போம் இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என அறிவித்தனர். அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. குளத்துள்வாய்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தயாராக இருந்தனர். இந்த வாக்குச்சாவடியில் 453 ஆண்கள், 530 பெண்கள் என மொத்தம் 983 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 மணி நிலவரப்படி 8 பேர் வாக்களித்துள்ளனர். வாக்காளர்கள் இல்லாமல் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

