இலங்கை காப்புறுதித் துறையை நவீனமயமாக்கும் ‘அபிவிருத்தி வரைபடம்’ IRCSL மற்றும் IASL இனால் உத்தியோகபூர்வமாக வெளியீடு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் காப்புறுதித் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் வகையில், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCSL) மற்றும் இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) இணைந்து தயாரித்த ‘காப்புறுதித் துறை அபிவிருத்தி வரைபடம்’ (Insurance Sector Development Roadmap) நேற்றைய தினம் (21) மாலை கொழும்பிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய சிரேஷ்ட அரச அதிகாரிகள், மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துநர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிதித்துறை பங்குதாரர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

இலங்கையின் காப்புறுதித் துறையின் எதிர்கால வளர்ச்சியை வழிநடத்தும் ஒரு மூலோபாயக் கட்டமைப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த வரைபடமானது, நெகிழ்வுத்தன்மை, புத்தாக்கம் மற்றும் நீண்டகால தேசிய பங்களிப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, இத்துறையை நவீனமயமாக்கல், ஒழுங்குமுறை சீரமைப்பு, டிஜிட்டல் மாற்றம், நிதி அணுகல்தன்மை மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய முன்னுரிமைப் பகுதிகளை இந்த முயற்சி கோடிட்டுக் காட்டுகிறது. நாடெங்கிலும் காப்புறுதிப் பயன்பாட்டை அதிகரிப்பதன் ஊடாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார உறுதிப்பாட்டிற்கு ஆதரவளிப்பதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் அபிவிருத்தி வரைபடம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடன் தகவல் பணியகத்தினால் (CRIB) உருவாக்கப்பட்ட மத்திய காப்புறுதி தரவு களஞ்சியம் (Centralised Insurance Data Repository) காட்சிப்படுத்தப்பட்டதுடன், நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் மோட்டார் காப்புறுதி டிஜிட்டல் கார்ட் (Motor Insurance Digital Card) அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேலும், புதிய விதிமுறைகள் உள்ளடங்கிய முதன்மைச் சுற்றறிக்கை (Master Circular) குறித்த விழிப்புணர்வு அமர்வும், ஆணைக்குழுவின் புதிய செய்திமடல் வெளியீடும் இதன்போது இடம்பெற்றன.

இத்துறை சார்ந்த தரவு உட்கட்டமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம், சர்வதேச தரத்திலான காப்புறுதிச் சேவைகளை இலங்கையில் உறுதிப்படுத்த இந்த வரைபடம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.