இலங்கை சுற்றுலாவிற்கு வலுசேர்க்கும் வகையில் மலேசியாவின் ‘ShadowFax’ மோட்டார் சைக்கிள் குழுவினர் நாடளாவிய ரீதியில் சுற்றுலா

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

​இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பஸ்வேர்ட் இன்டர்நேஷனல் லங்கா தனியார் நிறுவனத்தினால் (Buzzword International Lanka Pvt Ltd) ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இப்பயணத்தின் முடிவில், மலேசியாவின் முன்னணி வர்த்தகர்களைக் கொண்ட ‘ShadowFax’ மோட்டார் சைக்கிள் கழக உறுப்பினர்கள் நேற்றைய தினம் (16) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார் கமகே அவர்களைச் சந்தித்தனர்.

​2013ஆம் ஆண்டு முதல் ‘கொழும்பு மோட்டார் சைக்கிள் வாரத்தை’ (Colombo Bike Week) தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வரும் பஸ்வேர்ட் இன்டர்நேஷனல் நிறுவனம், இம்முறை மலேசியாவின் முக்கிய வர்த்தகர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது.

ShadowFax குழுவினர் இலங்கையில் இவ்வாறான சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்; இதற்கு முன்னர் அவர்கள் 2016ஆம் ஆண்டு இவ்வாறானதொரு பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

​25 வருட அனுபவம் கொண்ட மோட்டார் சைக்கிள் வீரரான ‘டத்தோ’ முருகாநந்தம் (Dato MurugaNantham) தலைமையில் வந்த இக்குழுவினர், அமெரிக்க தயாரிப்பான 1500cc – 1900cc எஞ்சின் கொள்ளளவு கொண்ட ‘ஹார்லி டேவிட்சன்’ (Harley Davidson) ரக மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி நாடு முழுவதும் பயணித்தனர்.

ஏப்ரல் 06 முதல் 17 வரை நடைபெற்ற இந்தப் பயணம் கொழும்பு, யாழ்ப்பாணம், பாசிக்குடா, அறுகம்பே, மஹியங்கனை, கண்டி, நுவரெலியா, பண்டாரவளை மற்றும் ஹிக்கடுவை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.
​இச்சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலாவணி வருமானம் கிடைத்துள்ளது. இதில் ஹோட்டல் தங்குமிடம், விமானப் பயணம், எரிபொருள், உணவு, தனிப்பட்ட செலவுகள் மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் என்பன அடங்கும்.

​நேற்றைய தினம் கொழும்பு “காலி முகத்திடல் ஹோட்டலில்” நடைபெற்ற இந்த விசேட சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே, இவ்வாறான அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு ஈர்ப்பதன் மூலம் சுற்றுலாத்துறைக்கு பாரிய பங்களிப்பு கிடைப்பதாகத் தெரிவித்தார். இக்குழுவினருக்கு ஆதரவாக இலங்கையின் ‘Bikerholics’ மோட்டார் சைக்கிள் கழகத்தைச் சேர்ந்த 17 உறுப்பினர்களும் இப்பயணத்தில் இணைந்திருந்தனர்.

​இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், பொலிஸ் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இவ்வாறான பாரிய சர்வதேச மோட்டார் சைக்கிள் பயணங்களை ஏற்பாடு செய்ய எதிர்பார்ப்பதாக பஸ்வேர்ட் இன்டர்நேஷனல் லங்கா நிறுவனத்தின் தலைவர் திலக் லெஸ்லி (Tilak Leslie) மற்றும் மேலாண் இயக்குனர் நீல் ஹசீம் (Neil Hassim) ஆகியோர் தெரிவித்தனர்.