ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையானது சர்வதேச விதிகளுக்கு எதிரானது : எச்சரித்தது சீனா

Meiveli Media Team

ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையானது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என சீனா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பொறுப்பற்ற செயல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் என சீனா எச்சரித்துள்ளது. செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டினார். ஈரானியத் துறைமுகங்களை முடக்கும் அமெரிக்காவின் செயல், ஏற்கனவே பலவீனமாக உள்ள பிராந்திய அமைதியைச் சீர்குலைக்கும் ஒரு ‘ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற’ நடவடிக்கை.

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த ஒரு நாளில், இத்தகைய ஆக்ரோஷமான முற்றுகையை அமல்படுத்துவது பதற்றத்தை மட்டுமே அதிகப்படுத்தும். சர்வதேச சந்தையில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க வேண்டிய நேரத்தில்இ அமெரிக்கா இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஈரானிடமிருந்து அதிக அளவில் மசகு எண்ணெய் பெறும் நாடு சீனா. எனவே, இந்த முற்றுகை சீனாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. ஒருபுறம் ஈரான் – அமெரிக்கா மோதல், மறுபுறம் அமெரிக்க முற்றுகையை உடைக்கச் சீனா எடுக்கும் முயற்சிகள் என மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு பிரம்மாண்டமான ‘வல்லரசு மோதல்’ களமாக மாறி வருகிறது.