நாடகப் பட்டறையில் பழுத்த நடிகையாக தோன்றிய தேவதை நிஜத்தில் வந்தால் என்ன என்ற நினைப்பு அப்பப்ப வந்து ஈழ தேசத்தை இழுத்து நிறுத்தியது.
- ரேணுகா உதயகுமார் -

தாயக மண்ணில் ஊற்றெடுத்த நாடகப் பேரூற்று இசை வசமாகி பல்லாயிரக் கணக்கான மைல்கள் தாண்டி பிரித்தானியாவில் தடம் பதித்து கோலோச்சுவதென்பது அசாத்தியமான வெற்றியின் உச்சம் என்றே சொல்லலாம். சாம் என்கிற பெரும் ஒற்றைக் கலையாளுமை அதற்கு சற்றும் குறையாத கலைமாதேவி றஜித்தா சாமின் இணை ஆளுமை அன்றைய நாடக அரங்கின் உச்சமாய் ஒளிர்ந்தது. தமிழ் நாடகத்தையே விழாவாக்கி ஒரு தியேட்டரில் கொண்டாடித் தீர்த்த ஒரு நாள் அன்று. புலம்பெயர்ந்தோம் பிரிந்தோம் புலம்புகின்றோம் என்பதை எல்லாம் கடந்து நாடகத் துறையில் அவர்கள் தங்களுக்கான பணியை மிகக் காத்திரமாக அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்







