கொழும்பு ITC ரத்னதீப ஹோட்டல் கூரையில் விமானப்படை ஹெலிகாப்டர் வரலாற்றுச் சிறப்புமிக்க தரையிறக்கம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

 

​இலங்கை விமானப்படை வரலாற்றில் புதியதொரு மைல்கல்லை எட்டும் வகையில், கொழும்பு நகரில் அமைந்துள்ள ITC ரத்னதீப (ITC Ratnadipa) சொகுசு ஹோட்டலின் கூரையில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் (Helipad) முதன்முறையாக விமானப்படை உலங்குவானூர்தி ஒன்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன ஹோட்டல் வளாகத்தில், இலங்கை விமானப்படையின் இலக்கம் 04 உலங்குவானூர்தி படைப்பிரிவைச் சேர்ந்த Bell 412 ரக ஹெலிகாப்டர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை முன்னெடுத்தது.

​இலங்கையில் ஹோட்டல் ஒன்றின் கூரையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு, அதில் விமானப்படை வானூர்தி ஒன்று தரையிறங்கிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

நகரப் பகுதிகளில் ஏற்படும் அவசர கால மீட்புப் பணிகள், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் போக்குவரத்து மற்றும் இடர் மேலாண்மை ஒத்திகைகளின் ஒரு அங்கமாகவே இந்த பரீட்சார்த்தத் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டது. விமானப்படைத் தளபதியின் நேரடி வழிகாட்டலின் கீழ், மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகளால் இந்த நடவடிக்கை மிகுந்த துல்லியத்துடன் அரங்கேற்றப்பட்டது.

​சர்வதேச தரத்திலான இத்தகைய உட்கட்டமைப்பு வசதிகள் கொழும்பு நகரின் நவீனத்துவத்தை பறைசாற்றுவதுடன், அவசர காலங்களில் வான்வழிப் போக்குவரத்தை தடையின்றி கையாள்வதற்கான இலங்கையின் தயார்நிலையையும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெற்றிகரமான தரையிறக்கத்தின் மூலம், எதிர்காலத்தில் இராஜதந்திர ரீதியிலான பயணங்கள் மற்றும் அவசர மருத்துவத் தேவைகளுக்காக ஹோட்டல் கூரைகளில் உள்ள ஹெலிகாப்டர் தளங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிமுறை இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.