கொழும்பு ஊடகவியலாளர் சங்க கிரிக்கெட் தொடர்: கொழும்பு ரேஞ்சர்ஸ் அணி சாம்பியன்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்தினால் நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டித் தொடர், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை அங்கம்பிட்டிய விளையாட்டு மைதானத்தில் நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இப்போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும், அனுசரணை வழங்கிய நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இத்தொடரில், கொழும்பு லயன்ஸ் (Colombo Lions), கொழும்பு ரைடர்ஸ் (Colombo Riders), கொழும்பு ஸ்டாலியன்ஸ் (Colombo Stallions) மற்றும் கொழும்பு ரேஞ்சர்ஸ் (Colombo Rangers) ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றன. முதலாவது அரை இறுதிப் போட்டியில் கொழும்பு ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்த கொழும்பு லயன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் கொழும்பு ஸ்டாலியன்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு ரேஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொழும்பு லயன்ஸ் மற்றும் கொழும்பு ரேஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ரேஞ்சர்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு லயன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணி சார்பில் சரித் நியமால் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 25 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ரேஞ்சர்ஸ் அணி, 3.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 26 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றது. இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான கொழும்பு ஊடகவியலாளர் சங்க கிரிக்கெட் கிண்ணத்தை கொழும்பு ரேஞ்சர்ஸ் அணி சுவீகரித்தது. அந்த அணி சார்பில் சதுர தேஷான் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும், மகேஷ் பெரேரா ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால மற்றும் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சம்பக ராமநாயக்க உள்ளிட்ட அதிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
சாம்பியன் பட்டம் வென்ற கொழும்பு ரேஞ்சர்ஸ் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆயுள் காப்பீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டது.
இத்தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக கொழும்பு லயன்ஸ் அணியின் அமல் கால்லகே தெரிவு செய்யப்பட்டதோடு, சிறந்த துடுப்பாட்டக்காரராக அதே அணியின் சரித் நியமால் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் நாயகன் விருதை கொழும்பு ரேஞ்சர்ஸ் அணியின் சதுர தேஷான் பெற்றுக்கொண்டார்.


