மாத்தளையில் இயங்கிய வதைகூடங்கள் – கோட்டாவுக்கு எதிராக குற்றச்சாட்டு
நாட்டில் 1988, 1989 ஆம் ஆண்டு கலவர காலபகுதியில் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற நபர்களை காணமலாக்கிய பல்வேறு சம்பவங்களில், அப்போது இராணுவத்தின் மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என்று காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஒன்றியம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியத்தின் செயலாளர் மரீன் நிலாஷானி கருத்து தெரிவிக்கையில்,
“2012 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் மனித புதைகுழியொன்று தோற்றம் பெற்றது. அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வைத்திய பரிசோதனைகளில், 1986 – 1994 ஆம் ஆண்டு காலபகுதியில் வெளியேற்றப்பட்ட சடலங்கள் என்பது அதில் உறுதிபடுத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இதுதொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுதொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து இதனை மூடிமறைத்து விட்டார்கள்.
1988, 1989 ஆம் ஆண்டு காலபகுதியில் மாத்தளை மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக கோட்டபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராக இருந்தமையினாலேயே இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றி காலபகுதியில் மாத்திரம் மாத்தளை மாவட்டத்தில் 720 வரையிலானவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலபகுதியில் மாத்தளை மாவட்டத்திலிருந்த சகல பொலிஸ் நிலையங்களுக்கும், ஐந்து வருடங்களுக்கு மேல் பழைமையான சகலரது ஆவணங்களையும் நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பட்டலந்த வதைகூடத்தை ரணில் முன்னெடுத்துச் சென்ற காலத்தில், மாத்தளை முன்னெடுக்கப்பட்டு வந்த சகல வதைகூடங்களையும் செயற்படுத்தியது, வழிநடத்தியது கோட்டாபய ராஜபக்ஷ ஆவார்” – என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்