இந்தப் பொய்யர்களையும், பொய்களையும் கோலோச்சும் ஆளும் தரப்பை தோற்கடித்தே ஆக வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இன்று வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் நடத்தும் போது இந்த திசைகாட்டி அரசாங்கம் அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த ஆளுந்தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்தபோது வைத்தியசாலை வேலை நிறுத்தம், சுகாதாரப் போராட்டங்களை நடத்தினர். எதிர்க்கட்சியில் இருக்கும் போது வேலைநிறுத்தங்கள் மூலம் மரணம் நிகழ்ந்தாலும், அது அவர்களின் பார்வையில் இயற்கையான மரணமாகும். இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் வேலை நிறுத்தங்களுக்கு தடை பிரப்பித்துள்ளனர். இவ்வாறான பொய்யர்களையும், பொய்களை கோலோச்சும் கலாசாரத்தையும் தோற்கடித்தே ஆக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் பொய் கூறிக்கொள்ளும் அரசாங்கமாக மாறியுள்ளது. நீண்ட காலம் செல்வதற்கு முன்னமே இவர்கள் அப்பட்டமான பொய்யர்கள் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்வர். இதற்கு நீண்ட காலம் எடுக்காது. வரவு செலவுத் திட்டத்தின் இறுதி உரையில் பெரும் பொய்யராக இருந்து வரும் அரசாங்கத்தின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி அவர்கள் அரசியல்வாதிகள் பல்டி அடிப்பது குறித்து பிரஸ்தாபித்தார். பல்டி அடிக்கும் அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் என்றார். அவர் அப்படிச் சொன்னாலும், ஜே.வி.பி., வரலாறு நெடுகிலும் பல்டி அடித்துள்ளது. எனவே, இது தொடர்பில் பேச அவருக்கு தார்மீக உரிமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வளமான நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறிக் கொண்டு 35,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இன்று பொய்களை கூறி மக்களை ஏமாற்றும் முடிவுகளை எடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு மக்கள் மீது வெட்கமும் பயமும் இல்லை. என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி வெட்கமும் பயமும் கொள்கிறது. மக்களை ஏமாற்றுவதற்கும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதற்கும் நாம் ஒருபோதும் தயாரில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறியது. ஒரு தரப்பே இந்நாட்டை ஆட்சி செய்து நாட்டை அழித்ததாக கூறித் திரிகின்றனர். இது இவ்வாறு இருக்கத்தக்க, இந்த பாட்டாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திசைகாட்டி அரசாங்கம், அரிசி, தேங்காய் விலைகளை 100 ரூபா ஆல் அதிகரித்துள்ளன. உர மானியத்தை கூட முறையாக வழங்காது இழுத்தடித்து வருகின்றது. அரச ஊழியர்களுக்கு அடுத்த மாத சம்பளம் கிடைக்கும் போது, சம்பளம் அதிகரிப்பு குறித்து சரியான புரிதல் கிட்டும். எண் மாயாஜாலத்தின் ஊடாக எல்லா இடங்களிலும் ஏமாற்று வேலைகள் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.