நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற படுகொலை மிகப்பாரதூரமானது உடனடி விசாரணைகள் மூலம் தீர்வை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்பதாக நீதியமைச்சர் தெரிவிப்பு
நீதிமன்றத்தினுள் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம் மிகப்பாரதூரமானது எனவும், இதுகுறித்து உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வை வழங்குவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கனேமுல்ல சஞ்சீவ, நேற்று புதன்கிழமை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கொன்றுக்காக அழைத்துவரப்பட்டு, சாட்சிக்கூண்டில் நிறுத்தப்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதனையடுத்து அவ்விடத்துக்கு விரைந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நீதிமன்ற வளாகத்துக்குள் செல்ல முற்பட்ட வேளையில், ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளித்தார்:
இது மிகப்பாரதூரமான விடயம். இதுகுறித்த பொறுப்பை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. மிகவலுவான பாதுகாப்புக்கு மத்தியில் தான் ‘கனேமுல்ல சஞ்சீவ’ அழைத்துவரப்பட்டார். இருப்பினும் தற்போது நீதிமன்ற அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டியிருக்கிறது. இங்கு பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒருவர் மாத்திரமன்றி, மேலும் பல அப்பாவி மக்கள் இருக்கிறார்கள். ஆகவே இச்சம்பவம் தொடர்பில் நாம் பொறுப்பேற்றுக்கொள்வதுடன், இதுகுறித்து வெகுவிரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை எம்மால் உறுதிப்படுத்தமுடியும். படுகொலைகள் உள்ளிட்ட இவ்வாறான சம்பவங்கள் எமது ஆட்சியில் மாத்திரமன்றி, கடந்த காலங்களிலும் இடம்பெற்றன. இருப்பினும் அவற்றுக்கு உரியவாறு தீர்வுகாண்பது எமது பொறுப்பாகும். யார் ஆரம்பித்திருந்தாலும், அதனை நாம் முடிவுறுத்துவோம். அதேபோன்று சகல பிரஜைகளினதும் உயிருக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். எனவே அதனைப் பாதுகாப்பதற்குத் தக்க நடவடிக்கை எடுப்போம்.
அதேவேளை நாம் இப்போது சட்டமூலமொன்றைத் தயாரித்திருக்கிறோம். அதனூடாக நீதிமன்றத்துக்கு வருகைதராமல், தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையத்தில் இருந்தவாறு காணொளி ஊடாக சாட்சியமளிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும். அதனை வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும். அதன்மூலம் மிகுந்த அவதானத்துக்குரிய நபர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யமுடியும் என்றார்.
அதனைத்தொடர்ந்து அவர் உள்ளே பிரவேசிக்க முற்பட்டபோது, அவரையும் பரிசோதிக்குமாறு அங்கிருந்த சிலரால் குரலெழுப்பப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அவர், தன்னை பரிசோதிப்பதற்கு அனுமதித்து, அதன் பின்னர் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.