கனேமுல்ல சஞ்சீவ யார்? ஏன் நீதிமன்றத்துக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார்?

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நீதிமன்ற பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ என்ற நபரே நீதிமன்றத்திற்குள் கொல்லப்பட்டார்.

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது, செப்டம்பர் 13, 2023 அன்று, கணேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன்படி, சந்தேக நபர் இன்று காலை பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து அளுத்கடே நீதிமன்ற வளாகத்திற்கு நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்டபோதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டடுள்ளது.

கனமுல்ல சஞ்சீவ யார்:

கனேமுல்ல சஞ்சீவ கொழும்பின் பாதாள உலக கோட் பாதராக தன்னை நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தவர். 30 க்கும் அதிகமான கொலை சம்பவங்களில் கூலி கொலைகாரராக இவர் செயற்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன.
திட்டமிட்ட ஒரு கும்பலோடு சேர்ந்து தனியார் வங்கியொன்றில் 7 கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் கைதானவர்.
சிறைக்கு சென்ற சஞ்சீவ அப்போதைய கொழும்பின் பாதாள கோட் பாதர்களான ‘பிளூமெண்டல் சங்க, ஆர்மி சம்பத்’ ஆகியோரது அடியாளாக வெளியில் வந்தார்.

அதன் பின்னர் கட்டம் கட்டமாக கொழும்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சஞ்சீவ முயற்சிகளை செய்தாலும் அதற்கு தடையாக தெமட்டகொட சமிந்த – இவரும் பாதாள உலக உறுப்பினர் தடையாக இருந்திருக்கிறார்.

எனவே சமிந்தவை கொலை செய்ய சஞ்சீவ முயற்சி செய்தார். முதல் சம்பவமாக தெமட்டகொட இறைச்சிக்கடைக்கு முன்னால் வாகனத்தில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினார். ஆனால் சமிந்தவின் தம்பி ருவன், சஞ்சீவவுக்கு முன்னர் வந்தார். எதிரில் இருந்து சஞ்சீவ வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதனால் இவர்களின் அடியாள் ஒருவர் உயிரிழந்தாலும் தெமட்டகொட சமிந்த உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் பின்னர் சஞ்சீவ உட்பட்ட குழு போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு துபாய் சென்றனர். ஆனால் குறுகிய நாட்களுக்கு பின்னர் மீண்டும் சஞ்சீவ இலங்கை வந்தார். மீண்டும் சமிந்தவை கொலை செய்ய முயன்றார்.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் சமிந்த ஆஜராகி மீண்டும் சிறைக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியை தெமட்டகொட பகுதியில் பாதை நடுவில் இடைமறித்து இந்த சஞ்சீவ உட்பட அவரது குழு பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கேயும் சமிந்த உயிர்தப்பிய நிலையில் குற்றவாளிகளை தேடி போலீசார் வலைவீச ஆரம்பித்தனர். குறுகிய காலத்துக்குள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதில் இந்த சஞ்சீவவும் இருந்தார்.

மீண்டும் சிறைக்குச் சென்ற சஞ்சீவ கொழும்பை கைவிட்டுவிட்டு கம்பஹா மாவட்ட பாதாள செயட்பாடுகளை தனக்குக் கீழ் கொண்டுவர முயற்சி செய்தார். அங்கே அவருக்கு தடையாக இருந்தவர் தான் ஒஸ்மான் என்பவர். 2018 ஏப்ரல் மாதம் ஒஸ்மான் மீதும் துப்பாக்கிச்சூட்டு நடத்தினார் சஞ்சீவ. அதற்காக தனது அடியாட்களான ‘அஜா மற்றும் சூளா’ என்பவரையே பாவித்தார்.இதுவே சஞ்சீவவின் சாதாரணமான பின்னணி. இவருடைய திட்டங்களின் அடிப்படையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலிட முடியாதவை. 30 க்கும் அதிகம் என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது.

போதைப்பொருள் வியாபாரம், கப்பம் பெறுதல், கொலைகள் என்பவற்றை பகிரங்கமாக செய்த இவர் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டார்.
இன்னுமொரு கொலைவழக்கு தொடர்பில் பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் இலக்கம் 05 நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு சாட்சியம் வழங்கிக்கொண்டிருந்தார்.

குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டிருந்த நிலையில்தான் சட்டத்தரணி வேடம் அணிந்த துப்பாக்கி தாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். குற்றவாளிக்கூண்டுக்கு மிக அருகில் சென்றுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி தாரி அருகில் சென்றாலும் ஒருவேளை சஞ்சீவவின் சட்டத்தரணியாக இருக்கலாம் என்றே அநேகர் நம்பியுள்ளனர்.

இதேவேளை கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.