இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்படாது: அரசு அறிவிப்பு
இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும் அரசியலமைப்பு திருத்த பணிகளை விட பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது. அந்த வகையில் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொள்ளப் போவதில்லை.
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமானதாகும். ஆனால், தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பாரிய சவால் பொருளாதார சவாலாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான முழு அரசாங்கமும் அந்த சவாலை எதிர்கொள்வதற்கான பணிகளிலேயே ஈடுபட்டுள்ளது.
பொருளாதாரம் ஓரளவு ஸ்திர நிலைமையை அடைந்ததையடுத்து அரசியலமைப்பு திருத்தப் பணிகளை முன்னெடுப்போம். அந்த பணிகளையும் நீண்ட நாட்களுக்கு இழுத்துச் செல்ல மாட்டோம். குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். அதற்கமைய நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் பொறுத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்’ என்று ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்