மருதானை பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய தமிழ்ப் பெண் மரணம்: தற்கொலையா கொலையா வலுக்கும் சர்ச்சைகள்

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் 70ஆண்டுகளாக தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்ட பொலிஸாரது மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்த மரணம் போலீசாரின் தடுப்பு காவலில் இருந்தபொழுது நடைபெற்றதால் போலீசாரே இவரது மரணத்திற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.பிடியாணை ஒன்று தொடர்பில் மருதானை பொலிஸார் மூலம் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் விளக்கமறியலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பொன்னையா கலாதர்ஷனி எனும் இரு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. விபச்சார தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்ததுடன் குறித்த வழக்கு தொடர்பில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் நீதிமன்றம் குறித்த பெண்ணுக்கு பிடியாணை ஒன்றை பிறப்பித்தாகவும், அதன்படி, பொலிஸார் நேற்று முன்தினம் அவரை கைது செய்து மருதானை பொலிஸ் நிலையத்தின் விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து நேற்று காலை அவரை மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் தயாராகி இருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், 24 மணித்தியாலமும் பொலிஸ் அதிகாரிகள் தரித்திருக்கும் மருதானை பொலிஸ் நிலையத்தின் விளக்கமறியலில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை சந்தேகத்திற்கிடமான ஒரு விடயம் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.