ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் எட்டப்படவில்லை : செல்வம் அடைக்கலநாதனன் தலைவரல்ல : மறுத்த சுரேஸ் பிரேமச்சந்திரன்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒற்றைத் தலைமை ஏற்படுத்துவது குறித்து தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார்.ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒற்றைத் தலைமையை நியமிக்கவேண்டும் என அண்மையில் நடந்த கூட்டத்தில் ஒரு சிலர் கருத்து வெளியிட்டனர்.ஆயினும் அந்தக் கருத்து உடனடியாகவே நிராகரிக்கப்பட்டது.அவ்வாறான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை. இனிமேலும் அப்படி ஒரு தீர்மானம் எட்டப்படமாட்டாது எனவும் தெரிவித்தார். இதேவேளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிக்கவுள்ளதாக அவரது கட்சியினர் முன்னெடுக்கும் பரப்புரையை கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மறுதலித்துள்ளார்.
இலத்திரனியல் ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்ததாக ஓர் அனாமதேய செய்தி வெளியிடப்பட்டுவருகின்றது. இதுவரை நடைபெற்ற கூட்டணி கூட்டங்கள் எதிலும் தலைவர் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை . அத்தகைய எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவுமில்லை . எமது யாப்பில் சில மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலேயே விவாதித்திருந்தோம் என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இதேவேளை தமிழ்த் தரப்பின்மீது குற்றங்களைச் சுமத்தி தீர்வினை எட்டாமல் செய்வதற்கான அரசின் சாதுர்யமான பிரித்தாளும் தந்திரோபத்தையே இது காட்டுகிறது என அவா தெரிவித்தார்.அத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ்த் தரப்புகள் அவதானமாகவும் ஒன்றுபட்டும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை தமிழ் அரசியல் பரப்பில் உள்ளோர் புரிந்துகொள்ள வேண்டும்.குறுகிய கட்சி நலன்களைக் கைவிட்டு, தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது தொடர்பான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற சக்திகளாகவும் வலுவான சக்திகளாகவும் தங்களை தகவமைத்துக் கொள்வதற்கான காலச்சூழல் ஏற்பட்டிருப்பதாகக் கருதுகின்றோமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.