முன்பு பெரியாரை ஆதரித்தேன். தற்போது தெளிவு வந்துவிட்டது அதனால் எதிர்க்கிறேன்.: சீமான் சர்ச்சைப் பேச்சு
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. நேற்று பேசியதை தொடர்ந்து இன்று புதுச்சேரியில் பேசுகையில் கூட பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தான் தனது கொள்கை என ஆவேசமாக பேசினார் சீமான். அப்போது தான் தவெக தலைவர் விஜய் பற்றியும் தனது அரசியல் கருத்தை முன்வைத்து பேசினார் சீமான். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஆதரவு தெரிவித்த சீமான், திராவிடம் மற்றும் தமிழ் தேசிய அரசியல் என விஜய் அரசியல் பேசியதை தொடர்ந்து அவரை கடுமையாக எதிர்த்தார் சீமான்.
இன்று புதுச்சேரி செய்தியாளர் சந்திப்பிலும் கூட செய்தியாளர் ஒருவர், உங்க தம்பி கூட திராவிடத்தை முன்னிறுத்தி தான் அரசியல் கட்சி ஆரம்பித்தார் எனக் கூறவே, ‘அதனால் தான் அவருடனும் நாங்கள் சண்டை போட்டு வருகிறோம்.’ என பேசினார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். மேலும் பேசுகையில்,’பெரியரையும் திராவிடத்தையும் எதிர்ப்பதே எனது கொள்கை. முன்பு பெரியாரை ஆதரித்தேன். தற்போது தெளிவு வந்துவிட்டது அதனால் எதிர்க்கிறேன்.
திராவிடம் என்றால் ஒன்றுமில்லை. திராவிடம் எனும் சொல் இருப்பதால் தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை அகற்றுவோம் என கூறுகிறோம். திராவிடம் எந்த மொழி சொல்? தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக புரட்சி பாவலர் பாரதிதாசன் எழுதிய பாடலை படுவோம். தேசிய கீதத்தை பற்றி நான் ஏன் பேச வேண்டும்?’ எனவும் சீமான் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டு பேசினார்.