“இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன்” – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய –

வீடியோ இணைப்பு

2024ம் ஆண்டிற்கான “பிரத்திபாபிஷேக” பெண் தொழில் முயற்சியாளர்;களுக்கான விருது விழா கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் ஜனவரி 7ம் திகதி இடம்பெற்றது. இலங்கை மகளிர் தொழிற்துறை மற்றும் வர்த்தக சபை இதனை ஏற்பாடு செய்திருந்தது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் 2024ம் ஆண்டுக்கான சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான விருதினை கலாநிதி திலேஷா பெரேரா வென்றார்.

இங்கு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இவ்வாறு கருத்து வெளியிட்டார், “வியக்கும் திறன்களைக் கொண்டு நீங்கள் எமது நாட்டிற்கும் தொழிற்துறைக்கும் வழங்கியுள்ள புத்தாக்கங்களைப் பார்க்கும் போது உங்கள் திறமைகள் அற்புதமாக உள்ளன. உங்கள் அனைவரையும் இவ்வாறு பார்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதில் மிக முக்கியமான விடயம் என்னவெனின், இந்த பெண்கள் தமது வியாபார நடவடிக்கைகளை பெண்களுக்கு சொந்தமான, பெண்களால் வழிநடத்தப்படும் ஒன்றாக முன்னெடுத்துச் செல்வதாகும்.

இலங்கையில் பெண்களின் பொருளாதார பங்களிப்பு கடந்த சில வருடங்களில் அன்னளவாக 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதென சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கூலி தொழிலாளியாக பெண்களின் பங்குபற்றுதலை முதன்மையாக பிரதிபலிக்கின்றது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஊதியம் பெறாத வேலை மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்பு வேலையில் அவர்களின் கணிசனமான பங்களிப்பை இது விலக்கியுள்ளது. இந்த செயற்பாடுகள் ஊடாக பிரதானமாக பாலின பொறுப்புக்கள் தொடர்ந்தும் குறைத்து மதிப்பிடப்படுதல் மற்றும் குறைத்து ஊக்குவிக்கப்படுவதை வெளிப்படுத்துகின்றன. பெண்கள் மேற்கொள்ளும் ஊதியம் பெறாத வேலை மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்பு வேலைகளையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகுமென” பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் பெருமையடைகிறேன். இந்த நேர்மறையான மாற்றம் பெண்களின் குரல்கள் மேலும் விரிவாக மற்றும் அதனை உள்ளடக்கிய நிர்வாகத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்வதாகவும்” பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தனது உரையின் போது மேலும் சுட்டிக்காட்டினார்.