மொசாட் இலங்கைக்கு வருவது நல்லதல்ல : நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

இலங்கையில் உள்ள இஸ்ரேல் நாட்டவரின் மதத்தலங்கள் மற்றும் கலாச்சார தலங்களுக்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

மொசாட் இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் எழுப்பிய கேள்வியின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி, பிரதமர் சபாநாயகர், சபை முதல்வர் என அனைவரும் கடந்த காலத்தில் நிபந்தனைகளின்றி பலஸ்தீன விடுதலைக்காக குரல்கொடுத்தவர்களாகும். கடந்த காலத்தில் அமையபெற்ற அரசாங்கங்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்கொடுப்பதற்கு பதிலாக இஸ்ரேலுடன் உறவுகளை பேணிவந்தன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவில் எமக்கு பின்னடைவுகளும் ஏற்பட்டன.

பலஸ்தீனம் தொடர்பில் சர்வதேச ரீதியாக எமக்கு இருந்த கௌரவத்துக்கும் கடந்த அரசாங்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தின.இலங்கையின் பல பிரதேசங்களில் இஸ்ரேலியர்களின் மதஸ்தலங்கள் மற்றும் கலாசார மத்தியஸ்தலங்களை அமைத்து வருகின்றனர். இவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதுடன், அவை கட்டப்பட்டும் வருகின்றன. மாத்தறை வெலிகம பகுதியில் இவ்வாறான கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ளது. தெஹிவளை அல்விஸ் பகுதியிலும் இவ்வாறான கட்டிடமொன்று கட்டப்படுகிறது. கொழும்பு 07 சிற்றம்பலம் கார்டினல் வீதியிலும் பாரிய கட்டிடமொன்று கட்டப்படுகிறது.இந்த கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களுக்கு 24 மணித்தியாலமும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பின் கீழ் அமைக்கப்படும் கட்டிடங்கள் என்ன என்பது தொடர்பிலேயே எமக்கு பிரச்சினை உள்ளது.

தெஹிவளை அல்விஸ் பகுதியில் குறித்த கட்டிடம் கட்டப்படும் பகுதியில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கொண்டுசென்று தெஹிவளை பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். நீதிமன்றத்தின் ஊடாகதான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.பலஸ்தீனத்துக்காக நாம் அனைவரும் பாதையில் இறங்கி போராடிய வரலாறு உள்ளது. இந்த கட்டிடங்கள் இது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக நாம் கருதுகிறோம். ‘மொசாட்’ இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல. வெலிகடையில் குறித்த கட்டிடம் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிலேயே அமைக்கப்பட்டுள்ளது. விரைவாக இதுதொடர்பில் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.