சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்: அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கிடம் சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு.
உலகின் பல நாடுகளில் இருக்கின்ற மிக உன்னதமான அரசியல் தீர்வாக பார்க்கப்படும் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வுக்காகவே தமிழ் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கோரி நிற்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பது நாட்டை பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல.
எனவே புதிய ஆட்சியாளர்கள் ஒரு அரசியல் சாசனத்தை கொண்டுவரும்பொழுது அதில் இணைந்த வடக்கு – கிழக்கில் அர்த்தபுஷ்டியான -கௌரவமான -நீடித்து நிலைத்துநிற்கக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் மற்றும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கப்போவதாக ஆட்சியாளர்கள் கூறி வருகிறார்கள்.
அவ்வாறு ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் அதில் இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எங்களுடைய எதிர்பார்ப்பும் கோரிக்கையும் ஆகும். நாங்கள் கோரி நிற்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பது நாட்டை பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. உலகின் பல நாடுகளில் இருக்கின்ற மிக உன்னதமான அதிகாரப்பகிர்வு இந்த சமஷ்டி முறைமையாகும். ஆகவே, ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாக இனங்களுக்கிடையில் ஒற்றுமை பலப்பட்டு சுதந்திரமாக அனைத்து இன மக்களும் வாழவேண்டுமாகவிருந்தால் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியமாகும்.
அந்த அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் ஒன்று நாட்டில் உருவாகும்பொழுது மேற்படி தீர்வொன்றுக்கு அரசாங்கம் நகர்வதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவேண்டுமென எடுத்துக்கூறினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். அதேபோல், பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அமெரிக்காதான் ஜெனீவாவில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தது. ஆனால், அத்தீர்மானம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் பின்னடைவே.எனவே ஜெனீவா தீர்மானத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு அமெரிக்கா கூடியளவில் கரிசனை கொள்ளவேண்டும் என்றும் தூதுவரிடம் எடுத்துக்கூறினோம் எனவும் சுட்டிக்காட்டினார்.