ஊழல் வழக்குகளை துரிதப்படுத்த ஜனாதிபதிக்கு அழுத்தம்
இலங்கையின் ஜனாதிபதியாக அனுர குமார திஸநாயக்க தெரிவாகி 100 நாட்களுக்கு மேலாகும் நிலையில் பல முக்கியமான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டுள்ளது.
கொள்ளையர்களை விரைவாக பிடிக்க வேண்டும்’ என்ற அழுத்தம் ஜனாதிபதியின் மீது அதிகரித்து வருவதாகவும், தாமதங்களுக்கு அதிகாரிகளை குறை கூறும் போக்கை காணக்கூடியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் குற்றவியல் வழக்குகளில் முழுமையாக விசாரணைகளை நிறைவு செய்யாமல், பொலிசாரால் விசாரணையில் சில பகுதிகளின் அறிக்கைகளை மாத்திரம் அனுப்பப்படும் போது, அப்படியான வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுக்களை மீண்டும் விசாரிக்கப்போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
உயர்மட்டத்தில் எழும் குற்றசாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது போதிய அரச சட்டத்தரணிகள் இல்லாத காரணத்தால் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அடுத்து, சட்ட மா அதிபர் திணைக்களம் அப்படியான வழக்குகளின் விசாரணையை முன்னெடுப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது. அதிலும் முக்கியமாக தீவிரமான பல வழக்குகளில் பொலிஸ் விசாரணைகள் முழுமையாக நிறைவடையாத காரணங்களினால், தம்மால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்குகளை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என அந்த திணைக்களம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக நாட்டின் சட்ட மா அதிபர் பரிந்த ரணசிங்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஊழலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, நீதிமன்றங்களில் வழக்குகளை பதிவு செய்வதில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தாமதங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.ஆவணக் கோப்புக்களை சட்ட மா அதிபர் திணைக்களம் ஏழு ஆண்டுகள் வரையில் பூட்டி வைத்திருக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. சில வழக்குகளில் அவை பதிவு செய்யப்பட்ட நாளுக்கு பின்னர் ‘தூசு தட்டாமல்’ அப்படியே வைத்திருந்து காலம்கடந்து நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன’, என ஜனாதிபதி அப்போது சுட்டிக்காட்டியிருந்தார்.