விசா இல்லாமல் இடைமாற்றப் பயணத்தில் சீனாவில் 10 நாட்கள் தங்கலாம்: கொள்கையை தளர்திய சீனா

அதிகமான வெளிநாட்டு வருகையாளர்களை ஈர்ப்பதற்காக விசா இல்லாமல் இடைமாற்றப் பயணம் தொடர்பான கொள்கையை சீனா சற்று தளர்த்தியுள்ளது. முன்னதாக, சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் மூன்று முதல் ஆறு நாள்களுக்கு இருக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து அது தற்போது 240 மணி நேரம் அதாவது 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய குடிநுழைவு நிர்வாகம் அதன் அதிகாரத்துவ ‘வீசேட்’ கணக்கில் இந்நடைமுறை குறித்து அறிவித்ததுடன் இது உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் தெரிவித்தது.

பிரேசில், கனடா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா உட்பட 54 நாடுகளைச் சேர்ந்தவர்கள், சீனாவில் இடைமாற்ற வருகையளித்து மூன்றாவதாக ஒரு நாட்டுக்குச் செல்லும் நிலையில் 24 மாநிலங்களில் உள்ள 60 துறைமுகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து விசா இன்றி சீனாவுக்கு வரலாம் என்றும் அக்குறிப்பிட்ட பகுதியில் 240 மணி நேரத்திற்கு மிகாமல் தங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் கொள்கையை சீனா மொத்தம் 38 நாடுகளுக்கு நீட்டித்துள்ளதாக கடந்த நவம்பர் மாதம் சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. சிங்கப்பூர்இ ஸ்பெயின், நெதர்லாந்து உட்பட இந்த 38 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சீனாவுக்குச் செல்ல விசா தேவையில்லை. அத்துடன் வர்த்தகம், சுற்றுப்பயணம், குடும்பத்தாரைச் சந்தித்தல், இடைமாற்றப் பயணங்கள் போன்ற நோக்கங்களுக்காக 30 நாள்கள் வரை சீனாவில் தங்க இயலும்.