கேரளாவின் மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதாக அதிர்ச்சித் தகவல்

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு காய்கறிகள், பால், கனிம வளங்கள் ஆகியவை லொறிகளில் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிலிருந்து திரும்பும் லொறிகளில் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஆகியன மூட்டைகளில் கட்டி தமிழகத்தில் கொட்டப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கேரளா திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டுள்ளன. அக் கழிவுகளில் பஞ்சுகள், குளுக்கோஸ் போத்தல்கள், மருத்துவமனை அனுமதிச் சீட்டுகள், இரத்தக் கசிவுகள் போன்றவை அடங்கும்.

இச் சம்பவம் தொடர்பில் சோதனை நடத்தி வரும் வருவாய்த்துறை அதிகாரிகள் இது தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.