வீடுகளில் தண்டிக்கப்படாதவன் நாடுகளின் ராஜா ஆவதில்லை!

-சாம் பிரதீபன்-


தண்டிப்பதென்று முடிவெடுத்தால்
அதில் சங்கு என்ன சைக்கிள் என்ன
நிந்திப்பதென்று முடிவானால்
அதில் வீடென்ன மான் என்ன
சந்திப்பதென்பது முடிவாகிப் போனால்
அதில் நிலம் என்ன புலம் என்ன

ஏற்பது என்பது தெரிவாகிப் போனால்
அதில் சரி என்ன தவறென்ன
தோற்பது என்பது நிரூபணம் ஆனால்
அதில் உறவென்ன பகையென்ன

அங்கீகரிப்பது என்பது உறுதியாகினால்
அதில் உண்மை என்ன பொய் என்ன
நிராகரிப்பதாய் அறுதியிட்டுக் கொண்டால்
அதில் வீரம் என்ன அச்சம் என்ன

என் சொந்தங்களே!
கர்ஜனை சிங்கமாய் இருப்பதில் தவறில்லை
காடு எமதாய் இருக்கட்டும்!
பூக்கள் எந்தத் தோட்டத்திலும் மலரட்டும்
தேன் வதை எமதாய் கட்டப்படட்டும்!
பலியிடல் எந்தக் கோவிலிலும் நிகழட்டும்
பூஜை எமதாய் நடக்கட்டும்!
வழிகள் எந்தத் திசையிலும் விரியட்டும்
பயணம் எமதாய் தொடரட்டும்!
சிறகுகள் யாருடையதாகவும் வளரட்டும்
பறத்தல் எமதாய் முடியட்டும்!
கலங்கரை எங்கேயும் அமையட்டும்
கடல் மட்டும் எமதாய் கிடக்கட்டும்!

உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா?
வீடுகளில் தண்டிக்கப்படாதவன்
நாடுகளின் ராஜா ஆவதில்லை.
கரைகளின் திசை அறியாதவன்
ஆழ்கடலில் ஆட்சி அமைப்பதில்லை.
பூனைக்கு மணிகட்டத் திராணியற்றவன்
புலியிடம் பேரம்பேசுவதில்லை.
மழையின் சத்தத்திற்கு பழக்கப்படாதவன்
புயலோடு கைலாகு கொடுப்பதேயில்லை