இந்தியாவின், கேரளவில் தொலைக்காட்சி தொடர்களுக்கு எதிராக பரிந்துரைகள்
இந்தியாவின், கேரள மாநிலம் திருவனந்தபுரம், மலப்புரம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் 13 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களிடம் தொலைக்காட்சி தொடர்கள் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.அந்த ஆய்வில் 43 சதவீதமானோர் தொடர்கள் தவறான செய்திகளை தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் 57 சதவீதமனோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கருப்பொருள் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இவ் ஆய்வின் முடிவில் குழந்தைகள் ஒழுக்கக் கேடான மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களை பின்பற்றுவதும் தெரிய வந்துள்ளது.
எனவே, மலையாள தொலைக்காட்சி தொடர்களை ஒழுங்குப்படுத்துவதோடு, மெகா தொடர்களையும் தடை செய்ய வேண்டும் என்று கேரள மகளிர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது தொடா்பில் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள விடயங்களாவன, தொலைக்காட்சியில் அன்றாடம் ஒளிபரப்பாகும் மெகா தொடர்களை நிறுத்த வேண்டும். மேலும் ஒரு அத்தியாயத்தின் எண்ணிக்கை 20 முதல் 30 வரை இருக்குமாறு குறைக்கப்பட வேண்டும்.ஒரு தொலைக்காட்சி ஒரு நாளைக்கு இரண்டு தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும். தொடர்களை மறு ஒளிபரப்பு செய்யக்கூடாது.
நிகழ்ச்சிகளை ஆய்வு செய்வதற்கு தணிக்கை வாரியம் அல்லது புதிய சிறப்பு வாரியம் பொறுப்பேற்க வேண்டும்.இளையோர்கள் பார்ப்பதற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தவறான வார்த்தைகள் இடம்பெறுவதை தடை செய்ய வேண்டும்.பெண்களை இழிவாக சித்தரிக்கக் கூடாது. ஆபாசமான உள்ளடக்கங்கள் பரவுவதை தடுக்க கடுமையான விதி முறைகளை அமுல்படுத்த வேண்டும் என அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.