வறுமை மற்றும் பட்டினியை ஒழிக்க உடனடி முயற்சிகள்

உணவு அல்லது போதுமான ஊட்டச்சத்து கிடைக்காத மூன்று கோடிமக்களுக்கு உணவளிக்க உதவுவதற்குப் பதிலாக ஆயுதங்களுக்காக பெரும் தொகை செலவிடப்படுவதைக் குறித்து திருத்தந்தை கவலை.
வறுமையையும், பட்டினியையும் ஒழிக்க உடனடியாகவும், ஒன்றுபட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 18ஆம் தேதி திங்களன்று ரியோ தி ஜெனெரோவில் தொடங்கியுள்ள G-20  மாநாட்டில் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தியை எடுத்துரைத்தார்.

இன்றைய உலகின் ஆயுத மோதல்களால் மிகவும் மோசமடைந்துள்ள பட்டினி, உணவு அல்லது போதுமான ஊட்டச்சத்து கிடைக்காத மூன்று கோடி மக்களுக்கு உணவளிக்க உதவுவதற்குப் பதிலாக, ஆயுதங்களுக்காக பெரும் தொகை செலவிடப்படுவதை கவனத்தில் கொள்ளுமாறு திருத்தந்தை தனது செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு சிறந்த உலகிற்கு தங்களின் பங்களிப்பை செலுத்தவும், டன் கணக்கில் உணவுகள் தூக்கி எறியப்படும் அதே வேளையில்  இலட்சக்கணக்கானோர் பசியால் அவதிப்பட்டு மடிந்து கொண்டிருக்கும் நிலையில்,  உலகில் பசியை நீக்குவதற்கான உடனடி மற்றும் முதன்மையான தேவையையும் திருத்தந்தை அவர்கள் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களைக் கருத்தில் கொண்டு, போரினை நிறுத்தவும், நிலையான அமைதியை கட்டியெழுப்பவும், பட்டினியின் துயரத்தை விரைவில் நிவர்த்தி செய்யவும் அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  வறுமையிலிருந்தும் பட்டினியிலிருந்தும் பாதிக்கப்பட்ட  மக்களை விடுவிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை ஒருபோதும் கைவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பசி மற்றும் வறுமையை ஒழிக்க பன்னாட்டு அமைப்புகள் மற்றும் சமூகம் முழுவதிலுமிருந்து ஒரு நிலையான உறுதிப்பாடு தேவை என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

உணவை வீணாக்கும் அவலங்களை சரி செய்ய  கூட்டு நடவடிக்கை தேவை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இன்று அனைவருக்கும் உணவளிக்க போதுமான உணவு உள்ள போதும், பல்வேறு காரணங்களால் அது சரிநிகரற்ற  முறையில் பகிரப்படுகிறது  என்றும் கூறியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க நிறுவனங்களின் அனுபவங்களையும், ஈடுபாட்டையும் பகிர்ந்து கொள்வதன் வழியாக, திருப்பீடம் தனது சொந்த பங்களிப்பை வழங்குவதோடு   மனித மாண்பை மேம்படுத்தும் முயற்சிகளைத் தொடரும் என்றும்  உறுதியளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.