நீண்ட தூர ஏவுகணைகளால் ரஷ்யாவைத் தாக்க அமெரிக்கா அனுமதி

Kumarathasan Karthigesu-பாரிஸ்

வடகொரியத் தலையீட்டால் தனது போர்க்கொள்கையை மாற்றியது வோஷிங்டன்!!பிரான்ஸும் இங்கிலாந்தும் அதேவழியில் பச்சைக்கொடி?

அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளைப் (long-range missiles) பயன்படுத்தி ரஷ்யாவின் எல்லைக்குள் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைனுக்கு அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கியிருக்கிறார்.
தங்களை அடையாளம் காட்ட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலைச் செய்தி நிறுவனங்களுக்கு வெளியிட்டிருக்கின்றனர்.
பைடன் நிர்வாகம் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஆட்சி அதிகாரங்களை ஒப்படைக்கத் தயாராகிவரும் நிலையில் உக்ரைன் போர் தொடர்பான இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா தனது துருப்புக்களை மொஸ்கோவுக்கு ஆதரவாக அங்கு அனுப்பியதற்குப் பதிலடியாகவே உக்ரைன் போர் தொடர்பான அமெரிக்காவின் இந்த முக்கிய கொள்கை மாற்றம் இடம்பெற்றுள்ளது என்று”நியூயோர்க் ரைம்ஸ்” மற்றும்”வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகைகள் தெரிவித்திருக்கின்றன.
உக்ரைன் போரில் இணைந்துகொள்வதற்காக சுமார் பத்தாயிரம் வடகொரியப் படையினர் ரஷ்யாவில் இறங்கியுள்ளனர் என்று நேட்டோ உளவு சேவைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்ய மண்ணில் இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு அனுமதி தரப்பட வேண்டும் என்று உக்ரைன் அரசுத் தலைவர் நீண்ட காலமாகக் கோரி வருகிறார். குறிப்பாக ஏரிஏசிஎம்எஸ் (ATCMS) என்ற முதல் எழுத்துக்களால் அறியப்படுகின்ற சக்திவாய்ந்த இராணுவத் தந்திரோபாய ஏவுகணை அமைப்பு (powerful Army Tactical Missile System) மூலம் ரஷ்யாவுக்குள் இலக்குகளைத் தாக்க அனுமதிக்க வேண்டும் என்று ஷெலென்ஸ்கி வற்புறுத்திக் கேட்டுவந்தார். ஆனால் மொஸ்கோவுடன் நேரடியான மோதலை ஏற்படுத்தி விடும் என்பதால் தனது ஆயுதங்களை ரஷ்யாவின் எல்லைக்கு உள்ளே பாவிக்க அமெரிக்கா தடை நிபந்தனை விதித்திருந்தது.
தற்சமயம் வடகொரியப் படைகள் உக்ரைன் போரில் இணைந்துகொண்டிருப்பதை மேற்கின் புலனாய்வு சேவைகள் உறுதிசெய்திருப்பதை அடுத்து, பதவி விலகிச் செல்லவிருக்கின்ற அதிபர் பைடன் அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவை நேரடியாகத் தாக்குவதற்குப் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். இது போரில் பலத்த விரிவாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
படம்:இங்கிலாந்தின் Storm Shadow ஏவுகணை..
அதேசமயம், அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்ஸும் இங்கிலாந்தும் இதேபோன்று அனுமதியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது. இது இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உக்ரைன் அமெரிக்காவின் ஏசிரிஎம்எஸ்(ATCMS) இங்கிலாந்தின் ஸ்ரோம் ஷடோ(Storm Shadow) பிரான்ஸின் எஸ்கல்ப்(Scalp) போன்ற நீண்ட தூர ஏவுகணைகளைத் தன்வசம் வைத்துள்ளது.
நேட்டோவின் ஏவுகணைகள் மூலம் தனது மண்ணில் தாக்குதல் நடத்தப்பட்டால் அது ரஷ்யாவுடன் நேட்டோ நேரடியாகப் போர் தொடுப்பதாகவே கருதப்படும் என்று அதிபர் விளாடிமிர் புடின் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை – வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டில் ராஜதந்திர வழிமுறைகள் ஊடாகப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி சில தினங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பு வெளியாகி 48 மணி நேரம் கடப்பதற்கு முன் உக்ரைன் தலைநகர் கீவ் மீதும் ஏனைய பிராந்தியங்கள் மீதும் வெள்ளிக்கிழமை இரவு ரஷ்யா பெருமெடுப்பிலான வான் தாக்குதலை நடத்தியிருக்கிறது. பிரதான மின்சார நிலைகள் இலக்கு வைக்கப்பட்டதால் தலைநகரமும் ஏனைய பகுதிகள் சிலவும் இருளில் மூழ்கி உள்ளன.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">