அரசு சார்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூட தமிழ் தேசியம் பற்றி முழங்கம்:  பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு

தமிழ் தேசியத்தை, தமிழை தங்களது பெயரில் கொண்டுள்ள கட்சிகள் மாத்திரமல்ல, அரசு சார்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூட தமிழ் தேசியம் பற்றி முழங்கி வருகிறார்கள். தமிழ் தேசியத்தை இன்று உச்சரிப்பவர்கள் பலரும் தமிழ் தேசியத்தைக் கைவிட்டவர்களாகவும், தமிழ் தேசியத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் பயணிப்பவர்களாகவுமே உள்ளார்கள் என  தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நெஞ்சில் தமிழ் தேசியம் இன்றும் அடைகாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதனால்தான் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. தமிழ் தேசியம் என்பது உள்ளுடன் அற்ற ஒரு வெற்றுக்கோது அல்ல.

ஓர் இனம் பேசுகின்ற மொழி, அது வாழ்கின்ற சூழல், அதன் பண்பாடு ஆகியன பற்றிய ஒருகூட்டுப் பிரக்ஞையே தேசியமாகும். இது அந்த இனத்தின் ஆன்மா போன்றது. தேசியத்தின் கூறுகளாக உள்ள மொழி, சூழல், பண்பாடு ஆகியவனவற்றுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நிகழுகின்ற போதெல்லாம் உண்மையான தேசியவாதிகள் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். சிங்கள – பௌத்த தேசியவாதத்தால் தமிழினம் ஆக்கிரமிக்கப்பட்டபோதுதான் தமிழ் மக்களிடையே தமிழ் தேசிய உணர்வுநிலை மேலெழுந்து தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்டது எனத் தெரிவித்தார்.