தேர்தல் வாக்குறுதியின் பிரகாரம் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும்:  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

தேர்தல் வாக்குறுதியின் பிரகாரம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் அல்லது மறுசீரமைக்கும் தீர்மானத்தில் அரசாங்கம் உறுதியாக இருப்பதுடன், புதிய நாடாளுமன்றத்தில் இதுதொடர்பில் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகச் சந்திப்பு இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அச்சட்டம் நீக்கப்படாதென அரசாங்கம் கருத்துகளை வெளியிட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

தற்போது நாடாளுமன்றமொன்று இல்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சராக நானும் தான் உள்ளோம். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது அல்லது திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.