பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் சமகால அரசாங்கம் ஆராயவில்லை-விஜித ஹேரத்
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். புதிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படும் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் மாத்திரமே சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் சமகால அரசாங்கம் ஆராயவில்லை என்றும் அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகச்சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத்,
”குறித்த சட்டத்தை நீக்குவது குறித்து எவ்வித ஆராய்வுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து நீண்ட காலமாக உள்ளது. என்றாலும், திருத்தங்களை முன்மொழிந்து அவற்றை புதிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பின்னரே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் இறுதி தீர்மானத்தை எடுக்கும்.” என்றார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழ் தரப்பினர் தொடர்ந்து கோரி வருகின்றனர். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள பல்வேறு முயற்சிகளை தமிழ் தரப்பு மேற்கொண்ட போதிலும் கடுமையான இனவாதக் கருத்துகளால் அச்சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.