அனுர அரசிற்கு எதிராக திரளும் முன்னாள் ஜனாதிபதிகள்


புதிய அரசாங்கத்தினால் தமது சிறப்புரிமைகள் குறைக்கப்படுவதற்கு எதிராக குரல் எழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதிகளினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்விடயத்தில், தனிப்பட்ட முறையில் போராடுவதை விட, கூட்டாகச் செயற்படுவது பலனளிக்கும் என முன்னாள் ஜனாதிபதிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.

பட்டய கணக்காளர்களின் 45வது தேசிய மாநாடு 16ம்  ஆம் திகதி மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் தலைமையில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதிகள் கலந்துகொண்டு நாட்டின் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,  முன்னாள் ஜனாதிபதிகள் தமது சிறப்புரிமைகளை குறைப்பதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவிடம் முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே இந்த விடயத்தை முன்வைத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சிறப்புரிமைகள் தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், அரசாங்கம் இந்த மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கவுள்ளதான அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சலுகைகள் குறைக்கப்படுமாயின், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பான சட்டமூலத்தில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.