ஆரம்பத்திலே கேள்விகளோடு நகர்ந்த அரங்கு கூத்தின் கட்டியதோடு கட்டிவிடப்பட்டிருந்தது!

- ரேணுகா உதயகுமார் -

“நாம் பேச வேண்டியது மாற்றான் படலைகளோடு அல்ல! நம் வீட்டு விடலைகளோடு” என்று மிகக் கூர்மையான கனதியான வரிகளை பாடல்களாக ஆக்கி, அதில் காத்திரமான கருத்துக்களை முன்வைத்து, எங்கே? எங்கே? என்ற கேள்விக் கொத்தைத் தம் கூத்தால் ஒட்டு மொத்தமாக எல்லா இடங்களிலும் பிரதிபலிக்கக் கூடியதாகவே நகர்த்திச் சென்றிருந்த ஒரு ஆற்றுகை தான் மெய்வெளி அரங்க இயக்கத்தின் சர்வதேசமே கேள் என்ற கூத்தால் சொன்ன ஒரு கட்டியம்.

பெரும் கருத்தை, தமிழர்களின் பண்பாட்டு கோல வடிவங்களை, மிகச் சிரத்தையுடனும் மிக மிக நேர்த்தியோடும் ஒவ்வொரு சிறு இடங்களிலும் கலை அம்சத்தோடும் முன் வைத்த இந்தப் படைப்பானது, ஆரம்பத்திலே கேள்விகளோடு நகர்ந்தது. அதிலும் கேள்விகள் வெறுமனே வார்த்தைகளோடு ஜாலம் விட்ட கேள்விகள் அல்ல. தமிழர்களின் மரபார்ந்த கலை அம்சங்களோடு மனதை வருடுகின்ற அம்சங்களாக அன்று அரங்கேறி இருந்தன. அரங்கையே கூத்தின் கட்டியதோடு கட்டி விடப்பட்டதாகவே இருந்தது. குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய கூத்துக்கள் உள்ளடங்கலாக கலை அடையாளங்களைக் கொண்டமைந்து கேட்கப்பட்ட அந்த கேள்விகள் கூத்துக்குள் இருந்து கொதித்து எழுந்தபடியிருந்தன.

கூத்துக்கள் என்று பார்த்தால், காத்தவராயனில் தொடங்கி கோலாட்டம், கும்மி, கரகம் என்று தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள், குறிப்பாக கலை பண்பாட்டு கோலங்களை மையப்படுத்தியதாகவே இந்த ஆற்றுகை அமைந்திருந்தது. இதன் மையப் பொருள் என்னவென்று பார்த்தால் ஒரு கணம் எல்லோரையும் உறைய வைக்கும் பெரும் கேள்வி தான் அது. தலைமகன் எங்கே? இந்தப் பெரும் கூட்டத்தின் தலைவன் எங்கே? பெரும் கூட்டின் ராஜ பறவை எங்கே? என்று மிக மிக சத்தமாக கேட்டு சென்றது ஆற்றுகை.

அதிலும் உன்னதமான ஆத்மார்த்த கருவில், அவன் இருந்தபோது இருந்ததெல்லாம் இப்போது இல்லையே என்ற ஏக்கம் இழையோடி இருந்தது. துடுப்பில்லாத ஓடமாய் நட்டாற்றில் விட்ட கூட்டமாய் போனோம் என்ற பெரும் ஆதங்கம் கேள்விக் கணைகளாகத் தெறித்தது. ஆண்டவன் இருந்தபோது எல்லாம் இருந்தது என்று ஆற்றுகை அழுகையாய் கேள்விகளாய்த் துளைத்தெடுத்தது.

இதில் கலைகளுக்கேற்ற உடை ஒப்பனை ஆட்ட அசைவுகள் மொழிகள் எல்லாம் அந்தக் கலைஞர்களோடு இணைந்திருந்தமை இவ்வாற்றுகையின் வெற்றியாய்ப் பார்க்கலாம். ஆட்ட அசைவுகளில் மிக நேர்த்தியாக கூத்திற்கான அடையாளத்தை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதைவிட பாடல்களைத் தனித்துவமாய் இசையமைத்து தாலாட்டு கடல் களம் இடையிடை வரும் தாளலயக்கூத்து எல்லாமே எங்கள் பாரம்பரியக் கலைகளை விளக்கமாய் இசையோடு நடிப்பு பாவனையோடு தந்திருந்தமை மிகச் சிறப்பு. கலைக்கான பேருண்மையை சத்தியத்துடன் கட்டியம் கூறியது இந்தக் கூத்து. வற்றிக்கொண்டு போகும் எங்கள் கலையைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் ஷாம் அண்ணாவினதும் ரஜிதா அக்காவினதும் பங்கு அளப்பரியது.

இவர்களதும், மெய்வெளி அரங்க இயக்கத்தினதும், ஒவ்வொரு படைப்புகளையும் பார்ப்பவள் என்ற வகையில், மிக நேர்த்தியாவும் தாளக் கட்டுக்கள் சுருதி பிசகாமலும் ஆற்றுகைகளை அரங்கேற்றுவதில் அவர்களுக்கு நிகர் இவர்கள் தான் என்பதை இதிலும் நிரூபித்துள்ளார்கள். இதில் நடித்திருந்த சுகிர்தா, ஒரு பாடகியாக இருந்தாலும் நடிப்பிலும் தடம் பதித்துள்ளார். இடமும் பிடித்துள்ளார். இது உள்ளக கலையரங்க ஆற்றுகையாகவும் பிரித்தானியாவில் இதற்கு முதல் திறந்த வெளி அரங்க ஆற்றுகையாகவும் மேடையேறியிருந்தமை இன்னும் ஒரு பரிமாணம் ஆகும்.

நடிபாகமேற்று நடித்த குழந்தைகள் இருவரின் நடிப்பும், அடுத்த சந்ததி இளவலின் ஆட்டமும், அரங்கையே அதிர வைத்திருந்தது. அனைவரும் வாழ்த்துக்களுக்கு உரியவர்கள். ஒட்டுமொத்தமாக இந்த ஆற்றுகையில் மென் சோகமும், மிக ஆழமான கருத்துக்களும் தெரிந்தன. கேள்விகள் அனைத்தும் அறிவியல், அரசியல், ஏக்கம், தாக்கம், எங்கள் இலட்சியம் என்று எல்லாமும் வருவதால் முடிவு வரைக்கும் விடிவாய் முடிவு வரும் என்ற ஏக்கத்துடன் அவை அமர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. தமிழவையின் வெள்ளி விழாவில் மெய்வெளி அரங்கம் தந்த “கூத்தால் ஒரு கட்டியம்” எங்களை எல்லாம் கட்டி வைத்தது என்பதுதான் உண்மை. நன்றி ஷாம் அண்ணா ரஜிதா அக்கா மற்றும் மெய்வெளி.