மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவின் கருத்துக்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எதிர்வினை.

சமத்துவம் என்பது தனியொரு இனத்துக்கானதாக அன்றி, சகல இனங்களுக்குமானதாக அமையவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தைக் குறிப்பிட்டு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் டில்வின் சில்வாவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகள் என்னவென்பதை இன்னமும் அறிந்துகொள்ளவில்லை என்பதையே காண்பிக்கிறது என்றும்  தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையாது.

வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி தமிழ் அரசியல்வாதிகள் பேசுவதில்லை. மாறாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வு என்பன பற்றி மாத்திரமே பேசுவார்கள். இருப்பினும் நாம் வடக்கில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கட்டம் கட்டமாக உரிய தீர்வு வழங்குவோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

டில்வின் சில்வாவின் இக்கருத்தை ‘வடக்குஇ கிழக்கு தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷை என்னவென்பதை அறியாதோரின் கருத்து’ என விமர்சித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்தக் கருத்து நடைபெற்று முடிந்த  ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தாம் மேற்கொண்ட தீர்மானம் சரியானது என்பதைக் காண்பிப்பதாகத் தெரிவித்தார்.மேலும்,  பொதுத்தேர்தலின் பின்னர் ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், இயலுமானவரை அதில் சமஷ்டி கட்டமைப்பை உள்ளடக்குவதை முன்னிறுத்தி அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவோம்’ எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

அதேவேளை ‘இப்புதிய அரசியலமைப்பானது நாட்டை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடு என்பது அனைவருக்கும் தெரியும். அதனை இந்தக் கருத்து மீளுறுதிப்படுத்தியிருக்கிறது’ எனச் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.