வயநாடு இடைத்தேர்தல் : காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி., இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி

2024 நாடாளுமன்ற தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும், உத்திர பிரதேசம் ரேபரேலி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.காலியாக இருந்த வயநாடு மக்களவை தொகுதிக்கு அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுடன் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் 13ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் முக்கிய நிர்வாகியுமான பிரியங்கா காந்தி அக்கட்சி சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த  முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறங்கிய அன்னி ராஜாவுக்கு பதில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி  சத்யன் மோக்கேரி தற்போது வயநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. சத்யன் மோக்கேரி, கடந்த 2014 மக்களவை தேர்தலில் இதே வயநாடு தொகுதியில் சிபிஐ கட்சி சார்பாக களமிறங்கி 3,56,165 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷனவாஸ் 3,77,035 வாக்குக்கள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 18இல் தொடங்கி அக்டோபர் 25இல் நிறைவு பெறுகிறது. நவம்பர் 13 இல் வாக்குப்பதிவு நடைபெற்று தேர்தல் முடிவுகள் நவம்பர் 23இல் வெளியாகிறது.