புகலிடம் கோரி இத்தாலிக்கு வந்த வெளிநாட்டவர்கள் அல்பேனியா நாட்டு தடுப்பு முகாமுக்கு!

கப்பலேற்றும் பணி ஆரம்பம், அங்கிருந்து வீடியோ மூலமே தஞ்சக் கோரிக்கை விசாரிப்பு

Kumarathasan Karthigesu-பாரிஸ்
இத்தாலியில் இருந்து புகலிடக்கோரிக்கையாளர்களில் ஒரு பகுதியினர் முதல் முறையாக நேற்றைய தினம் அல்பேனியாவில் நிறுவப்பட்ட தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கடல்வழியாக இத்தாலி வந்தடைந்த எகிப்து நாட்டவர்கள் பத்துப் பேரும் பங்களாதேஷ் நாட்டவர்கள் ஆறு பேருமே கடற்படைக் கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டு அல்பேனியாவின் செஞ்சின் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தடுப்பு முகாமுக்கு ஏற்றப்பட்டனர்.
இத்தாலிக்குப் புகலிடம் கோரி வருவோருக்காக அல்பேனியாவில் “வரவேற்பு மையங்கள்” என்று குறிப்பிடப்படுகின்ற இந்தத் தடுப்பு நிலையங்களை நிறுவுகின்ற உடன்படிக்கை கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருந்தது. ஐரோப்பாவின் தென் கிழக்கில் அமைந்துள்ள பால்க்கன் நாடாகிய அல்பேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம்பெறாத மூன்றாவது நாடு ஆகும்.
இத்தாலி-அல்பேனியா உடன்படிக்கையின் படி – மத்தியதரைக் கடலைக் கடந்து இத்தாலி நோக்கிப் படையெடுத்து வருகின்ற வெளிநாட்டவர்கள் கட்டம் கட்டமாக அங்கிருந்து அல்பேனியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவர். அங்கு முதலில் அவர்கள் செஞ்சின்(Shengjin) என்ற துறைமுக நகரில் உள்ள முதலாவது தடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கு அவர்களைப் படம் எடுத்தல் மற்றும் விவரங்களைப் பதிவு செய்தல் போன்ற நடைமுறைகள் இடம்பெறும். பின்னர் அங்கிருந்து இருபது கிலோ மீற்றர்கள் தூரத்தில் Gjader என்ற இடத்தில் பழைய இராணுவ முகாம் ஒன்றில் நிறுவப்பட்ட இரண்டாவது தடுப்பு மையத்துக்கு மாற்றப்படுவார்கள்.
இத்தாலி அரசு இந்த இரண்டு நிலையங்களையும் 65 மில்லியன் ஈரோக்கள் செலவில் அங்கு நிறுவியுள்ளது. Gjader இல் நிறுவப்பட்ட இரண்டாவது நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்ற வெளிநாட்டவர்களது புகலிடக் கோரிக்கை அடுத்த 28 தினங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் அங்கிருந்தே சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர். அங்கு சுமார் 880 புகலிடக் கோரிக்கையாளர்களைத் தங்கவைக்கின்ற தனித்தனியான அறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
குடும்பமாக வருவோர் ஒன்றாகவே தங்கவைக்கப்படுவர். குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைத் தடுத்து வைப்பதற்காகச் சிறிய சிறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. புகலிடம் நிராகரிக்கப்படுவோர் பொலீஸ் கண்காணிப்பின் கீழேயே தங்கியிருக்க நேரிடும்.
இந்தத் தடுப்பு நிலையங்களை இத்தாலியத் தலைநகர் ரோமுடன் வீடியோ வழியாக இணைக்கின்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரோமில் உள்ள அதிகாரிகள் அகலத் திரைகள் மூலம் அல்பேனியாவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை நேரில் விசாரணை செய்வர்.
அரசசார்பற்ற அமைப்புகளினதும் மனித உரிமைக் குழுக்களினதும் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே ஜோர்ஜியா மெலோனி தலைமையிலான இத்தாலியின் தீவிர வலதுசாரி அரசு அல்பேனியாவில் இந்த நிலையங்களைத் திறந்துள்ளது.
அல்பேனிய நிலையங்கள் ஐரோப்பா நோக்கி வருகின்ற குடியேறிகளால் ஏற்பட்டுள்ள குழப்பங்களைச் சமாளிப்பதற்கான நல்லதொரு முன்னுதாரணமாக அமையும் என்று அது தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளது. இதேபோன்று குடியேறிகளை றுவாண்டா நாட்டில் முகாம் நிறுவித் தடுத்து வைப்பதற்கு இங்கிலாந்து எடுத்திருந்த நடவடிக்கைகள் எதிர்ப்புக் காரணமாகக் கைவிடப்பட்டமை தெரிந்ததே.
ஐரோப்பிய நாடுகளை நோக்கி வருகின்ற வெளிநாட்டவர்கள் மத்திய தரைக் கடலைக் கடந்து முதலில் இத்தாலிக்குள்ளேயே நுழைகின்றனர். இதனால் அந்த நாடு அவர்களைச் சமாளிப்பதில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">