பாரிஸ் நகரில் மரம் முறிந்து தந்தை பலி! இரு மகள்கள் படுகாயம்!! நாட்டின் தென்கிழக்கில் வெள்ளப் பெருக்கு!

48 மணித்தியாலங்களில் 60 சென்ரிமீற்றர் கனமழை, ஆறு மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கை

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பாரிஸ் நகரின் 19 ஆவது நிர்வாகப் பிரிவில் நேற்று மாலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் பாதசாரியான ஆண் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்தனர்.
நேற்று மாலை நகரில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த சமயத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்தது. 19 ஆவது நிர்வாக வட்டகையில் rue Curial தெருவில் சமூகக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றின்(résidence du bailleur social Paris Habitat) வாசலில் நின்றிருந்த மரமே திடீரெனச் சாய்ந்து வீழ்ந்துள்ளது. அப்போது வீதியில் சென்ற 49 வயதான தந்தை ஒருவரே மரத்தினுள் சிக்குண்டு படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார். அவரது பிள்ளைகளான 3,5 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளும் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைய நேரிட்டுள்ளது. அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அதே தெருவில் வசிக்கின்ற சிறுமிகள் இருவரும் தந்தையாருடன் ஒன்றாக வந்துகொண்டிருந்த சமயத்திலேயே இந்த அனர்த்தத்தில் சிக்குண்டனர் என்று கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த தாயார் அதிர்ச்சியால் மயக்கமடைந்தார் என்றும் தெரியவருகிறது.
மரம் சாய்ந்த சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. நேற்று மாலை குறுகிய நேரம் கொட்டிய கன மழையால் பாரிஸ் நகர வீதிகளில் வெள்ளம் நிரம்பிக் காணப்பட்டது.
இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக Saint-Denis பகுதியில் tramway T8 வழித்தடத்தில் நேற்றிரவு சேவைகள் தடைப்பட்டிருந்தன.
படங்கள் : Gier என்ற இடத்தில் கன மழையை அடுத்து வணிக வளாகத்தினுள்(centre commercial de Carrefour) வெள்ளம் புகுந்து நிரம்பியது. அங்கிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் 47 பேர் வரை வளாகத்தின் முதலாவது தளத்தில் சிக்குண்டுள்ளனர்.
இதேவேளை – பாரிஸ் உட்பட நாடெங்கும் பலத்த மழை பெய்து வருகிறது. நாட்டின் தென் கிழக்குப் பிரதேசங்களில் கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. சில இடங்களில் ரயில் பாதைகளை வெள்ளம் அடித்துச் சென்றுள்ளதால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. வானிலை அவதான நிலையமாகிய Météo-France AlpesMaritimes, Ardèche, HauteLoire, Loire, Lozère, Rhône ஆகிய ஆறு மாவட்டங்களில் அதி கூடிய விழிப்பு நிலையாகிய சிவப்பு எச்சரிக்கையை (vigilance rouge) விடுத்திருக்கிறது.
இதைவிட வேறு 33 மாவட்டங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கை (vigilance orange) விழிப்பு நிலையில் உள்ளன.
Ardèche மாவட்டத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 600 மில்லிமீற்றர் மழை (60 சென்ரிமீற்றர்) பதிவாகியிருக்கிறது. நினைவுக்கெட்டிய காலப்பகுதியில் இப்படி ஒரு மழைப் பொழிவைத் தாங்கள் கண்டதில்லை என்று அங்கு வசிக்கும் முதியவர்கள் சிலர் கூறியிருக்கின்றனர்.
வெள்ள நெருக்கடி குறித்துப் பிரதமர் மிஷெல் பார்னியர், உள்துறை அமைச்சரோடும், ஏனைய அதிகாரிகளோடும் அவசர ஆலோசனைகளை நடத்திவருகிறார்.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">