இஸ்ரேல் என்ற நாடு உருவாக ஐ. நாவே காரணம்!நத்தன்யாகு இதை மறக்கக்கூடாது, நினைவூட்டுகிறார் அதிபர் மக்ரோன்!!
அமைதிப்படை மீதான தாக்குதலால் பதற்றம்
இஸ்ரேல் என்ற நாடு உருவாகியதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமே காரணமாக அமைந்தது என்பதைப் பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாகு ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
பிரான்ஸின் அதிபர் மக்ரோன் இவ்வாறு கூறியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது லெபனான் நிலைவரம் தொடர்பாக ஆராயப்பட்டிருக்கிறது. அதன் போதே மக்ரோன் இஸ்ரேல் பிரதமருக்கு இதனை நினைவுபடுத்தியிருக்கிறார்.
சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளது வீரர்கள் பங்குபற்றும் அமைதிப்படை மீது இஸ்ரேல் வேண்டும் என்றே தாக்குதல்களை நடத்திவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த ஞாயிறன்று தங்களது தளம் ஒன்றின் வாயிலை இஸ்ரேலிய டாங்கிகள் வலோத்காரமாகத் தகர்த்து உள்நுழைந்த சம்பவத்தை லெபனுக்கான ஐ. நாவின் இடைக்காலப் படை (UNIFIL – United Nations Interim Force in Lebanon) கடுமையாகக் கண்டித்துள்ளது.