தமிழ்நாட்டில் கனமழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பால் மக்கள் அவதி

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கன மழை நீடித்து வரும் நிலையில், மழைநீர் தேக்கம் காரணமாக, 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நேற்று இரவிலிருந்தே தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் இது சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 460 கி.மீ தொலைவிலும் மற்றும் ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 530 தொலைவில் உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை (நெல்லூர்), சென்னைக்கு அருகாமையில் அக்டோபர் 17ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது