இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் பலி ..உறுதி செய்த பாதுகாப்பு அமைச்சகம்!

கடந்த ஆண்டு அக்டொபேர்-7 ம் தேதி தொடங்கிய, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தற்போது வரை முடிவுக்கு வராமல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த தாக்குதலில் இது வரை ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இப்படி நடைபெற்று வரும் போரில் ஹமாஸ்ஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலை தாக்கியது.இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஹசன் நஸ்ரல்லாவின் உயிரிழப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால், ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளுக்கு ஆதரவாக ஈரான் நாடு களமிறங்கியது.

இதனால், இஸ்ரேல்-ஈரான் இடையே போர் மூண்டது. இதில் இஸ்ரேலின் முக்கிய இடங்களைக் குறி வைத்து இரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால், அதனை பெரிய விளைவு ஏற்படாதவாறு இஸ்ரேல் ராணுவம் வானிலேயே இடைமறித்து தாக்கியது. இந்த திடீர் தாக்குதலுக்கு ஈரான் பதில் சொல்ல வேண்டும் எனவும் இதற்கு பதில் தாக்குதல் நடத்துவோம் எனவும் இஸ்ரேல் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று ஹிஸ்புல்லாக்கள் மத்திய இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தி இருக்கிறது.இந்த திடீர் தாக்குதலில் இஸ்ரேலின் 4 ராணுவ வீரர்கள் இறந்ததாகவும், 7 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேலும், இந்த ட்ரோன் தாக்குதலில் 61 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளது. ட்ரோன் தாக்குதலுக்கு 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.