இந்தியா தவறு செய்துவிட்டது: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிப்பு
இந்தியா தவறு செய்துவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை அதிகரித்துள்ளது.
கனடா நாட்டில் வசித்து வந்த தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்.
இதை இந்தியா மறுத்தது. இந்த சூழலில் டெல்லியில் உள்ள கனடா தூதரக பொறுப்பு அதிகாரி ஸ்டூவர்ட் வீலருக்கு மத்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் நேற்று மாலை சம்மன் அனுப்பினார். இதன் அடிப்படையில் ஆஜரான வீலரிடம் கனடா அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,கனடா நாட்டு மண்ணில் கனடா மக்களை அச்சுறுத்தும் மற்றும் கொல்லும் வெளிநாட்டு அரசாங்கத்தின் செயலை ஒருபோதும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
இது கனடாவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல். கடந்த கோடை காலத்தின் தொடக்கம் முதலே எங்களது ‘ஃபைவ் ஐஸ் பார்ட்னர்ஸ்’- ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
குறிப்பாக இந்தியாவின் இது மாதிரியான செயலை எதிர்கொண்ட அமெரிக்காவுடன் சேர்ந்து இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துகிறோம்’ எனக் கூறியுள்ளார். முன்னதாக, இது தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கனடாவில் உள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டி இருப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நாட்டு தூதரக பொறுப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது